Middle East - நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள் வளைகுடா நாடுகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானின் முக்கிய ராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
இந்தத் தாக்குதல்கள் தங்கள் நாட்டின் இறையாண்மையை மீறுவதாகவும், அமைதியை சீர்குலைப்பதாகவும் கருதும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள், ஈரானுக்கு எதிராக நேரடி ராணுவ நடவடிக்கை அல்லது கடுமையான பதிலடி கொடுப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. இந்த மோதலில் பொதுமக்கள் உயிரிழப்பதும், எண்ணெய் வளமிக்க பகுதிகளில் போர் மேகங்கள் சூழ்வதும் உலகப் பொருளாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
இது குறிப்பாக துபாய் மற்றும் குவைத் போன்ற பகுதிகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், தற்காப்பு நடவடிக்கைகளை வளைகுடா நாடுகள் பலப்படுத்தியுள்ளன. பதற்றத்தைத் தணிக்க பல்வேறு உலக நாடுகள் தூதரக ரீதியாக முயற்சி செய்தாலும், ஈரான் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், வளைகுடா நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து ஒரு கூட்டுப் பதிலடியைத் திட்டமிட்டு வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.