ஈரான் போர் சூழலால் உலகளவில் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா தனது சொந்தப் படைப்பான 'டைமெத்தில் ஈதர்' (DME) மூலம் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தத் தயாராகி வருகிறது. இந்த எரிவாயுவைப் பயன்படுத்தும் போது அடுப்புகளில் கரி படியாது. இதன் சுடர் கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு மிகவும் தூய்மையாக எரியும். புகை, நைட்ரஜன் ஒக்சைட்டு மற்றும் கந்தக ஒக்சைட்டு வெளியேற்றத்தை இது பெருமளவு குறைக்கிறது. புனேவில் உள்ள தேசிய வேதியியல் ஆய்வக (NCL) விஞ்ஞானிகள், கடந்த 20 ஆண்டு கால ஆராய்ச்சியின் பலனாக இதனை உருவாக்கியுள்ளனர். இதற்குத் தேவையான வினையூக்கிகள் (Catalysts) இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. இந்தியா ஆண்டுதோறும் பெருமளவு எல்பிஜி (LPG) எரிவாயுவை இறக்குமதி செய்கிறது. எல்பிஜியுடன் வெறும் 8% டைமெத்தில் ஈதரை கலப்பதன் மூலம் மட்டும், ஆண்டுக்கு சுமார் 9,500 கோடி ரூபாய் அந்நியச் செலாவணியைச் சேமிக்க முடியும் என விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். தற்போதுள்ள எல்பிஜி சிலிண்டர்கள் மற்றும் அடுப்புகளிலேயே இதனைப் பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பு. இதற்கெனத் தனியாக மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை. தற்போது சிறிய அளவில் உற்பத்தி செய்யப்படும் இந்த எரிவாயுக்களை, வணிக ரீதியாகப் பெரிய அளவில் உற்பத்தி செய்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
