உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் வைரல் செய்திகள், இலங்கை, ஆஸ்திரேலியா,கனடா,இந்தியா, தமிழ்நாடு , தொழில்நுட்பம்,செய்திகள், வர்த்தகம், விளையாட்டு, சினிமா, ஆன்மிகம்
தீராத வயிறு வலி.. "ஸ்கேன் பார்த்துட்டு கர்ப்பம்னு சொன்ன டாக்டர்கள்".. ஒரு ஆணால் எப்படி முடியும்..? கேலி கிண்டலால் வெளிவந்த பகீர் அலட்சியம்.!!
UP - வயிற்று வலியால் அவதிப்பட்ட இளைஞர் ஒருவருக்கு, அவர் 'கர்ப்பமாக' இருப்பதாகக் கூறி தனியார் மருத்துவமனை ஒன்று சான்றிதழ் வழங்கிய வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
மருத்துவமனையின் இந்த மெத்தனப் போக்கால் அந்த இளைஞர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் தர்ஷன். சிமெண்ட் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வரும் இவருக்கு, கடந்த சில நாட்களாகக் கடுமையான வயிற்று வலி இருந்துள்ளது. வலியால் துடித்த அவர், அலிகார் ராம்காட் சாலையில் உள்ள 'சன்ரைஸ்' என்ற தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், வலியின் தீவிரத்தைக் கண்டறிய 'அல்ட்ராசவுண்ட்'= ஸ்கேன் செய்யுமாறு பரிந்துரைத்தனர்.
ஸ்கேன் பரிசோதனை முடிவுகள் வந்தபோது, அதைப் பார்த்த தர்ஷனும் மருத்துவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த மருத்துவ அறிக்கையில், "இளைஞரின் கருப்பைக் குழாயில் கரு வளர்வதாகவும், சிறுநீரகக் குழாயில் வீக்கம் இருப்பதாகவும்" குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரு ஆணுக்குக் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டதாக வந்த அந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வினோதச் செய்தியை அறிந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் தர்ஷனைப் பார்த்துக் கேலி செய்யத் தொடங்கினர். இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த அவர், அழுது கொண்டே தனது வேதனையை வெளிப்படுத்தினார். "ஒரு ஆணால் எப்படி கர்ப்பமடைய முடியும்? இது எப்படிச் சாத்தியம்?" என்று புரியாமல் அவர் தவித்து வருகிறார்.
இது குறித்து மாவட்ட மருத்துவ அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் தர்ஷன் முறைப்படி புகார் அளித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "மருத்துவமனையின் தவறான அறிக்கையால் நான் சமூகத்தில் பெரும் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளேன். இந்தத் தவறான தகவலால் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நீதி வேண்டும்," என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்துச் சம்பந்தப்பட்ட மருத்துவர் அலோக் குப்தாவிடம் கேட்டபோது, அவர் தனது தவறை ஒப்புக்கொண்டார். மற்றொரு நோயாளிக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் அறிக்கையை, தவறுதலாகத் தர்ஷனின் பெயரில் அச்சிட்டு வழங்கியதே இந்தக் குழப்பத்திற்குக் காரணம் என அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் மருத்துவமனையின் இந்த அலட்சியப் போக்கு அப்பகுதியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.