மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து 7½ பவுண் நகை கொள்ளை.!
உறவினர் வீட்டிற்குச் செல்வதற்காக, பிரதான பஸ் நிலையத்தில் பஸ்ஸிற்காக காத்திருந்த 64 வயதுடைய மூதாட்டி ஒருவருக்கு, யுவதி ஒருவர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, அவர் மயங்கியதும் அவர் அணிந்திருந்த 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான 5 பவுண் தங்கச் சங்கிலி மற்றும் இரண்டரை பவுண் காப்புக்கள் என மொத்தம் 7½ பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் நேற்று புதன்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு - புதூர் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மயக்கமடைந்த நிலையில் மூதாட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
பெரியகல்லாறு பகுதியில் வசிக்கும் குறித்த மூதாட்டி, மட்டக்களப்பு - புதூர் பிரதேசத்திலுள்ள தனது சகோதரியின் மகள் வீட்டிற்குச் செல்வதற்காக, சம்பவ தினமான நேற்று முற்பகல் 11.00 மணியளவில் அங்கிருந்து பஸ் வண்டியில் ஏறி, மட்டக்களப்பு நகரிலுள்ள பிரதான பஸ் நிலையத்திற்குப் பிற்பகல் 2.00 மணியளவில் வந்தடைந்துள்ளார்.
புதூர் செல்வதற்கான பஸ் 10 நிமிடங்களுக்கு முன்னர் சென்று விட்டதால், அடுத்த பஸ் வண்டிக்காக அவர் பிரதான பஸ் நிலையத்தில் காத்திருந்துள்ளார். இதன்போது அங்கு மோட்டார் சைக்கிள் ஒன்றில் இளைஞர் ஒருவருடன் வந்த இளம் யுவதி ஒருவர், பஸ் வண்டிக்காகக் காத்திருந்த அந்த மூதாட்டிக்கு அருகில் சென்று பேச்சுக் கொடுத்துள்ளார்.
"இங்கு கள்ளர்கள் அதிகம், உங்கள் சங்கிலியை அறுத்துச் சென்று விடுவார்கள். எனவே தங்க ஆபரணங்களைக் கழற்றி கைப்பையில் வைக்கவும்" எனத் தெரிவித்ததுடன் தான் கொண்டு வந்த குளிர்பானப் போத்தலைக் கொடுத்து அதனைக் குடிக்குமாறு பல தடவை வற்புறுத்தியுள்ளார். மூதாட்டியும் அதனை வாங்கிக் குடித்துக் கொண்டார்.
குளிர்பானத்தைக் குடித்த அவர் மயக்கமடைந்ததையடுத்து, அவரின் கைப்பையில் வைக்கப்பட்டிருந்த 7½ பவுண் தங்க ஆபரணங்களை அந்த யுவதி கொள்ளையடித்துக் கொண்டு, மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞருடன் தப்பி ஓடியுள்ளார்.
இந்நிலையில், அங்கு மாலை 5.30 மணியளவில் பஸ்ஸிற்காக வந்த பெண் ஒருவர், குறித்த மூதாட்டி மயக்க நிலையில் கிடப்பதைக் கண்டு, அவரின் உறவினருக்குத் தகவல் தெரியப்படுத்திவிட்டு, அவரை உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று அனுமதித்துள்ளார் எனப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
