அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் அ.அருள்பாயஸின் கொலைக்கு நீதி வேண்டி, அவரது சடலத்துடன் போராட்டம் ஒன்றினை யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்த போராட்டத்துக்கு எதிராக பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் தடையுத்தரவை பெற்று, போராட்டத்தை தடுத்தனர்.
அந்த நீதிமன்ற தடை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நீதிவான் நீதிமன்றம் - யாழ்ப்பாணம்
1. அஜித்ராஜ் ஜானகி, கற்பகப்பிள்ளையார் வட்டு வடக்கு வட்டுக்கோட்டை. கோவிலடி, சித்தங்கேணி,
2. அஜித்ராஜ் அனோஜித், கற்பகப்பிள்ளையார் கோவிலடி, சித்தங்கேணி, வட்டு வடக்கு, வட்டுக்கோட்டை.
3. பங்குபற்றும் ஏனைய நபர்கள்.
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற வழக்கிலக்கம்: AR/286/2026
மேலே பெயர் குறிப்பிட்ட தங்களுக்கு எதிராக இன்றையதினம் மேற்குறிப்பிட்ட வழக்கானது யாழ்ப்பாணப் பொலிஸாரினால் கோப்பிடப்பட்டு, ஊர்காவத்துறை பொலிஸ் பிரிவிற்குள் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபரீன் இழப்பிற்கு நீதியான விசாரணை மேற்கொள்ளுமாறு உயிரிழந்தவரின் ஆர்ப்பாட்டமொன்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை முன்வீதி, உள்வட்ட வீதி மற்றும் பலாலி உறவினர்களாகிய உங்களால் என்பவற்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், இவ் ஆர்ப்பாட்டத்தை அனுமதிப்பதன் மூலம் பொதுமக்களின் இயல்பான வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுமெனவும், எனவே அதனை தடை செய்து கட்டளையாக்குமாறு 1979ம் ஆண்டின் 15ம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைச்சட்டக் கோவையின் பிரிவு 106 (1) (2) கீழ் விண்ணப்பித்துள்ளனர்.
இவ்விடயம் மன்றினால் ஆராயப்பட்டு பொதுமக்கள் தமது கருத்துக்களை ஜனநாயக ரீதியாக தெரிவிப்பது தொடர்பான உரிமைகள் அவர்களிற்கு உண்டு என மன்று காண்கின்ற அதேவேளை, வழக்குத் தொடுனரின் விண்ணப்பம் கவனத்தில் எடுத்ததன் அடிப்படையில், இவ் ஆர்ப்பாட்டத்தை நடத்துபவர்கள் பிரதான வீதிகளை முடுவதற்கான சாத்தியங்கள் இருப்பதற்கான வழக்குத் தொடுனரின் விண்ணப்பத்தில் நீதிமன்றம் கவனத்தில் எடுத்ததன் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை முன்வீதி, பஸ்தரிப்பிடம் மற்றும் பலாலி வீதியை மூடி எதுவித இடையூறும் செய்யக் கூடாதென்று கட்டளையாக்கப்பட்டுள்ளது என்பதை தங்களிற்கு அறியத் தருகிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸார் மரணச் சடங்கு இடம்பெறும் வீட்டிற்கு சென்று குறித்த தடையுத்தரவை வாசித்து காட்டி, மிரட்டியதாகவும், அயலில் உள்ள வீடுகளுக்கு சென்று இதில் கலந்துகொள்ள வேண்டாம் என்றும் மிரட்டியதாகவும் உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
