இந்தியாவின் ராஞ்சியிலிருந்து புதுடெல்லிக்கு தீக்காயமடைந்த நோயாளி ஒருவரை ஏற்றிச் சென்ற 'ஏர் ஆம்புலன்ஸ்' (Air Ambulance) வானூர்தி, சத்ரா மாவட்டத்தின் அடர்ந்த காட்டுப்பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்தில் வானூர்தியில் பயணித்த ஏழு பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெல்லியை சேர்ந்த 'ரெட்பேர்ட் ஏர்வேஸ்' (Redbird Airways) நிறுவனத்திற்குச் சொந்தமான பீச்கிராஃப்ட் C90 (Beechcraft C90) ரக வானூர்தி, நேற்றிரவு 7:11 மணிக்கு ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா வானூர்தி நிலையத்திலிருந்து புறப்பட்டது.
இரவு 7:34 மணியளவில் கொல்கத்தா வான்வழி கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பிலிருந்த வானூர்தி, வாரணாசிக்குத் தென்கிழக்கே சுமார் 100 கடல் மைல் தொலைவிலிருந்தபோது திடீரென ரேடார் தொடர்பிலிருந்து மறைந்தது.
பின்னர் சிமாரியா அருகிலுள்ள காட்டுப்பகுதியில் அது விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து நடந்த இடம் அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அக்ஷய் யாதவ் என்பவருக்குச் சொந்தமான ரெட்பேர்ட் ஏர்வேஸ் நிறுவனம் 2018 இல் தொடங்கப்பட்டது.
விபத்துக்குள்ளான VT-AJV எண் கொண்ட வானூர்தி உட்பட மொத்தம் 6 வானூர்திகள் இந்த நிறுவனத்திடம் உள்ளன.
இந்திய வானூர்தி போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள இந்த பாதுகாப்பு நெருக்கடி குறித்து வானூர்தி போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான DGCA விசாரணை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
