இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 12 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெடுந்தீவு கடற்பரப்பினுள் இரண்டு படகுகளுடன் 12 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 12 கடற்தொழிலாளர்களையும் அவர்களின் படகினையும் மயிலிட்டி மீன்பிடித்துறை முகத்திற்கு கொண்டு வந்த கடற்படையினர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
இதனை அடுத்து குறித்த 12 மீனவர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, தலைமன்னார் கடற்பரப்பில் இன்று கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளின் விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் ஆஜர் படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
