புதிய கல்வி மறுசீரமைப்புச் செயல்முறையின் கீழ், 06 ஆம் தரத்திற்கான சீர்திருத்தங்களை 2027 ஆம் ஆண்டில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (13) பிற்பகல் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.அரசாங்கம் ஆரம்பித்துள்ள புதிய கல்வி மறுசீரமைப்புச் செயல்முறை குறித்து இங்கு ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்திய ஜனாதிபதி, முதலாம் தரத்திற்கான மறுசீரமைப்புப் பணிகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
அதேவேளை, கற்றல் தொகுதிகளைத் தயாரிப்பதில் நிலவும் பிரச்சினைகள், ஆசிரியர் பயிற்சிகளில் ஏற்படும் தாமதம் மற்றும் தொழில்நுட்பச் சிக்கல்களைத் தவிர்த்துக்கொண்டு, 06 ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்புகளை 2027 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், கல்வி மறுசீரமைப்புச் செயல்முறை ஒன்றின் அவசியத்தை ஏற்றுக்கொள்வதாகவும், புதிய கல்வி மறுசீரமைப்புகளின் போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும், மாகாணங்களுக்கு இடையிலான ஆசிரியர் இடமாற்றங்கள், பதவியுயர்வுகள், சம்பள முரண்பாடுகள் மற்றும் அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் இக்கலந்துரையாடலில் விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.
.jpeg)