கிழக்கில் இன்று இரவு முதல் மழையுடனான வானிலை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது
திரிகோணமலைக்கு தென்கிழக்காக 120 கிமீ தொலைவில் நகரும் தாழ்வு மண்டலமானது தொடர்ந்தும் மேற்கு - வடமேற்கு திசையில் பயணித்து, இன்றிரவு வேளையில்
திருகோணமலை-முல்லைத்தீவு இடைப்பட்ட பகுதியில் கரை கடந்து வடக்கு மாகான நிலப்பரபினூடாக நாளை 10ம் திகதி தென் தமிழக கடற்பரப்பை அடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. (படம்-01)
இதன் விளைவாக கிழக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்றிரவுடன் விலகுவதோடு, வடக்கில் இன்று (09) மாலை முதல் மழைவீழ்ச்சி பதிவாக ஆரம்பிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், தற்போதைய தாழ்வு மண்டலம் உயிர்ப்புடன் மேகங்களை உற்பத்தி செய்வதற்கு வங்காள விரிகுடாவின் கிழக்கிலிருந்து வரும் மிதமான வெப்ப நீராவிக்காற்று மட்டுமே துணை செய்கிறது.வடக்கு, தெற்கு, மேற்கு என மூன்று பக்கமும் வறண்ட குளிர் காற்றின் தாக்கம் மிக அதிகமாக நேரடி எதிர்தாக்கம் புரிகிறது. இதன் காரணமாக எதிர்பார்த்த மழைவீழ்ச்சியின் அளவில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மேலும் இது திரிகோணமலையில் கரையேறி, வடக்கு மாகாண நிலப்பரப்பில் பயணிக்கும் போது ஒரு சாதாரண தாழ்வு நிலையாக வலுக்குறைந்த நிலையில் குமரிக்கடலில் நாளை (10) பிரவேசிக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்துவரும் 24 மணித்தியாலங்களை பொருத்தவரை, வடக்கு மாகாணத்தின் யாழ், வன்னி உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதுடன், காற்றின் வேகம் ஆகக்கூடியது 50kmph என்ற அளவில் காணப்படலாம் எனவும் எதிர்வுகூறப்படுகிறது.
09.01.2026 - 11.00AM
செந்தில் குமரன்
