வானிலை தொடர்பான நிலவரம் . புயல் பற்றி அச்சங்கொள்ள தேவையில்லை.
வங்காளவிரிகுடா மற்றும் அரபிக்கடல் என இருமருங்கிலும் ஆக்கிரமித்துள்ள வட இந்திய வறண்ட குளிர்காற்றின் தாக்கமானது, இலங்கைக்கு தென்கிழக்கே காணப்படும் தாழ்வு மண்டலத்தின் தீவிரம் மற்றும் நகர்வில் குறிப்பிடத்தக்க தாமதத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.
எனினும் இது தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் இலங்கையின் கிழக்கு கரையை நோக்கி மிகக்குறைந்த வேகத்தில் தனது நகர்வை மேற்கொண்டு வருகின்றது.
இதன் விளைவாக இப்போது முதல் அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திரிகோணமலை மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் 200 மிமீ வரையான கனமழை பதிவாகக்கூடுமென எதிர்வுகூறப்படுகிறது.
தொடர்ந்தும் வடக்கு - வடமேற்கு திசையில் முன்னேறக்கூடிய தாழ்வு மண்டலமானது நாளை 9ம் திகதி வெள்ளிக்கிழமை மதியத்துக்கு பின்னர் திருகோணமலை நிலப்பரப்பை அண்மிக்கும்போது, வடக்கே முல்லைத்தீவு முதல் யாழ்ப்பாணம் வரையான கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமென கணிக்கப்படுகின்றது.
குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் வன்னி பெருநிலப்பரப்பில் அடத்தி கூடிய அதிக நீராவி நிறைந்த மழை மேகங்கள் குவிக்கப்பட வாய்ப்புள்ளதால் 12 தொடக்கம் 24 மணிநேர இடைவெளியில் 200mm க்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியக்கூறுகளும் தென்படுகின்றன.
ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தப்பட்டதன் படி ,வடக்கு கிழக்கில் குளங்களை அண்டிய தாழ்வான பகுதிகளில் வசிப்போர் மற்றும் விவசாயிகள் வெள்ள நிலைமை தொடர்பில் முன்னெச்சரிக்கையாக செயற்படுவது பாதுகாப்பாக அமையும்.
மேலும், நிலப்பகுதிகளில் ஆககூடிய காற்றின் வேகம் 50-60 kmph வரை மட்டுமே காணப்படலாம் என்பதால் புயல் தொடர்பான வீண் பதற்றங்களை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
செந்தில் குமரன்
