எதிர்வரும் 29.01.2026 அன்று தென்மேற்கு வங்காள விரிகுடாவில் கீழ் வளிமண்டல தளம்பல் நிலை உருவாகும் வாய்ப்புள்ளது.
இதனால் வடக்கு, கிழக்கு, ஊவா மத்திய மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு மீண்டும் எதிர்வரும் 30.01.2026 முதல் 02.02.2026 வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அதன் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு எதிர்வரும் 06.02.2026 முதல் 09.02.2026 வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மீண்டும் 15.02.2026 முதல் 19.02.2026 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு பரவலாக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்குறிப்பிட்ட நாட்களில் நெல் அறுவடை, மற்றும் நெல் உலர விடும் செயற்பாடுகளில் ஈடுபடும் விவசாயிகள் இந்த நாட்களைக் கருத்தில் கொண்டு செயற்படுவது சிறந்தது.
கடந்த சில நாட்களின் மழை தொடர்பான முன்னறிவிப்புக்கள் முக்கியமாக நெல் அறுவடை மற்றும் நெல் உலர விடும் விவசாயிகளைக் கருத்தில் கொண்டே மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில விவசாயிகளின் வீதிகளில் உலர வைத்த நெல் மழையில் நனைந்து காணப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் காண முடிந்தன.
அது கவலைக்குரியது. ஆகவே விவசாயிகள் இந்த நாட்களில் தவிர்க்க முடியாமல் நெல் அறுவடை மற்றும் நெல் உலர விடும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டிய தேவை உள்ள விவசாயிகள் மழையை எதிர்கொள்வதற்கான போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளோடு அவற்றை மேற்கொள்வது சிறந்தது.
குறிப்பு: இது ஒரு நீண்ட கால வானிலை முன்னறிவிப்பு என்பதனால் இதில் சில மாற்றங்கள் நிகழக்கூடும் என்பதையும் கருத்தில் கொள்ளவும்.
- நாகமுத்து பிரதீபராஜா -
