உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் வைரல் செய்திகள், இலங்கை, ஆஸ்திரேலியா,கனடா,இந்தியா, தமிழ்நாடு , தொழில்நுட்பம்,செய்திகள், வர்த்தகம், விளையாட்டு, சினிமா, ஆன்மிகம்
சற்று முன் மக்களுக்கு அவசர எச்சரிக்கை! மாலை 5.30 மணிக்கு பிறகு ஏற்படவுள்ள தாழமுக்கம்
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கமானது நாட்டிற்குள் நுழையும் சாத்தியம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வளிமண்டலவியல் திணைக்களம் வழங்கும் அறிவுறுத்தல்கள் மற்றும் எச்சரிக்கைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
டிட்வா புயல் நாட்டை தாக்கிய போது பெரும்பாலான பகுதிகளில் அறிவுறுத்தல்களை பின்பற்றி விரைவான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படத நிலையிலேயே பெருமளவான பாதிப்புகள் பதிவாகியிருந்தன.
இவ்வாறான சூழலில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றி தொடர்ச்சியாக விழிப்புடன் செயற்படுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
தாழமுக்க தொகுதியானது தென்மேற்கு வங்காள விரிகுடா ஊடாக மேற்கு திசையாகவும் வடமேற்கு திசையாகவும் நகர்ந்து, நாளை (09) மாலை 5.30 மணிக்கும் இரவு 11.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் இலங்கையின் கரையை ஊடறுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தரை மற்றும் கடல் பிரதேசங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழை பெய்யக்கூடும்.
முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, பொலன்னறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 100 முதல் 150 மி.மீ வரையான பலத்த மழை பெய்யக்கூடும்.
யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களிலும், ஊவா மாகாணத்தின் மொனராகலை, பதுளை மாவட்டங்களிலும், மத்திய மாகாணத்தின் நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களிலும் 100 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (08) காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவிப்பானது, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கமானது நாளை (09.01.2026) பிற்பகல் வேளையில் ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியினூடாக நாட்டிற்குள் நுழையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சீரற்ற வானிலை நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தத் தாழமுக்கமானது தற்போது நாட்டின் கிழக்குக் கரையோரப் பகுதியான பொத்துவிலுக்குத் தென்கிழக்கே சுமார் 350 கிலோ மீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய மழையுடன்கூடிய காலநிலை காரணமாக, நீர்ப்பாசன திணைக்களத்திற்கு உட்பட்ட 26 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 24 மத்திய அளவிலான நீர்த்தேக்கங்கள் வான் பாயும் நிலையை அடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தற்போது கலாவெவ, கண்டலம வெவ, மாதுரு ஓயா, ராஜாங்கனய ஆகிய நீர்த்தேக்கங்களும் இதில் அடங்குவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், விக்டோரியா, ரந்தெணிகல, மொரகஹகந்த, கலு கங்க ஆகியவையும் தற்போது வான் பாயும் மட்டத்தில் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
தாழமுக்கம் கரையை நெருங்கி வருவதால், மறு அறிவித்தல் வரும் வரை கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் மீனவ மற்றும் கடற்படை சமூகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக, நாட்டில் மிக அதிக செறிவு கொண்ட கனமழை பெய்யும் பட்சத்தில், நீர்நிலைகளின் நீர்மட்டம் மிக வேகமாக உயரக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஆறுகள் மற்றும் குளங்களை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்கள் திடீர் வெள்ளப்பெருக்கு குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.