கணிதப் பரீட்சையில் குறைவடைந்த புள்ளிகளை பெற்றதாக மாணவிக்கு 160 தடவைகள் பிரம்படி கொடுத்த தனியார் கல்வி நிலைய ஆசிரியர் கைது
காலி நகரத்தில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற கணிதப் பாடப் பரீட்சையில் 32 புள்ளிகள் குறைந்ததாகக் கூறி தனியார் வகுப்பு ஆசிரியர் 11ம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவி ஒருவரின் கைகளில் பிரம்பால் 160 தடவைகள் அடித்து காயப்படுத்திய சம்பவம் காலியில் இடம்பெற்றுள்ளது.
இதனால் பலத்த காயமடைந்த மாணவி, தற்போது காலி கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான தனியார் வகுப்பு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர் பல்கலைக்கழகம் ஒன்றில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனிடையே தாக்குதலுக்கு உள்ளான மாணவியின் உறவினர்கள் தன்னைத் தாக்கியதாகக் கூறி, குறித்த ஆசிரியரும் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த காலி மேலதிக நீதவான் மஹேஷிகா விஜேதுங்க, தலா 3 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நேற்று அனுமதித்தார்.
