🔴 கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தின் மீது பாரிய பாறையுடன் கூடிய மண்மேடு சரிந்து விழுந்த அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மேலும் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் பாதுகாப்பு படையினர், பொலிஸார், அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
கனேதென்ன சந்தியிலிருந்து கடுகன்னாவ வரையிலான பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் வாகனங்கள் ரம்புக்கனை - கலகெதர வழியாக கண்டி நோக்கிச் செல்ல வேண்டும் என்றும், கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள் இந்த மாற்றுப் பாதைகளை பாவிக்குமாறும் பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.




