நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக குருநாகல் மாவட்டம், வாரியபொல மற்றும் நிகவெரட்டிய பகுதிகளில் பலத்த காற்றின் காரணமாக சுமார் 100 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக அதன் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
அவுலேகம, தமிழ்வெல்லம, ஏதம, கரந்தவெட்டிய போன்ற பகுதிகள் இந்த நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக பொகவந்தலாவையிலுள்ள பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதற்கமைய பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் பொகவந்தலாவையிலுள்ள கொட்டியாகல பகுதியில் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால்
தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்தும் பெய்து வரும் கன மழையைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட மண்சரிவு அபாய முன் எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் புதுப்பித்துள்ளது.
இந்த மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை அறிவிப்பு இன்று மாலை 7:00 மணி வரை பின்வரும்
பகுதிகளில் அமுலில் இருக்கும் என்று அறிவித்துள்ளது.
அதன்படி பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்லை மற்றும் ஊவா பரணகம, கண்டி மாவட்டத்தின் தொலுவ,
உடுநுவர, தெல்தோட்டை மற்றும் உடுதும்பர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தின் ரம்புக்கனை, புலத்கொஹுபிட்டிய,மாவனல்ல, ருவன்வெல்ல,அரநாயக்க,
கேகாலை மற்றும் யட்டியந்தோட்டை மாத்தளை மாவட்டத்தின் யாதவத்த, அம்பாங்கங்கா கோரலே, உக்குவெல, பல்லேபொல மற்றும் ரத்தோட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத்த, வலப்பனை மற்றும் அம்பகமுவ, இரத்தினபுரி மாவட்டத்தின் இம்புல்பே, எஹலியகொட, கலவானை, இரத்தினபுரி மற்றும் வெலிகேபொல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பதிவாகும்.
அத்துடன் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எனவே இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது
%20(1).jpeg)