மத்திய வங்கக் கடலில் தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளது*
முல்லைத்தீவுக்கு கிழக்காக 1000KM தொலைவில், அந்தமான் தீவுகளுக்கு அருகே மத்திய வங்கக் கடலில் தாழமுக்கம் (மத்திய அழுத்தம் 1009Mb) ஒன்று இன்று அதிகாலை உருவாகியுள்ளது. இதன் நகர்வு வடக்கு வடமேற்காகச் சென்று ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்துக்கும் விஜயவாடாவுக்கும் இடைப்பட்ட ஒரு பகுதியால் கரையைக் கடக்கும். இதன் தீவிரத்தையும் தற்போதைய நகர்வினையும் வைத்துப் பார்க்கும் போது இது ஒரு புயலாகவே கரையைச் சேரும் என்று கணிக்க முடிகிறது.
1. மேற்படி தாழமுக்கம் இலங்கையை விட்டுத் தூரப்பாதையில் பயணிப்பதால் அதன் தீவிர பாதிப்புக்கள் இலங்கைக்கு இல்லை என்ற போதும் இன்றுமுதல் வடக்கில் மிதமானது முதல் ஓரளவு கனமானதுவரையான மழை பெய்யும்.
2. தற்போதைய நிலையில் வைத்துப் பார்க்கும் போது இந்தத் தாழமுக்கத்தினால் அதிதீவிர மழை வடக்கில் இல்லை என்ற போதும் வானம் மேகமூட்டத்துடனும் அடிக்கடி கனமழையும், காற்றும் என்று சில தினங்களுக்கு தளம்பல்நிலை அமைந்திருக்கும். இது எதிர்வரும் 28ம் திகதி வரை நீடிக்கும்.
3. குறித்ததாழமுக்கத்தினால் வடக்கின் ஏனைய மாவட்டங்களை விடவும் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு ஆகிய கரையோர மாவட்டங்கள் ஓரளவு அதிக மழையைப் பெற்றுக் கொள்ளும்.
4. வடக்கில் புயல் பாதிப்பு, வெள்ளப் பாதிப்புப் பற்றிய புரளிகள் தேவையற்ற ஒன்று. ஆனால் வடக்குக் கிழக்குக் கடலில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் இதனை எதிர்வரும் தினங்களுக்கு தவிர்த்துக் கொள்வது நல்லது.
5. நெற்செய்கையில் கிருமி நாசினி மற்றும் உரம் இடுவோர் ஒட்டுமருந்துகளைப் பாவிப்பதால் மூன்றுமணிநேரம் சரி மழை இல்லாத பொழுது தேவையாக இருக்கும் என்பதனால் இதனைக் கவனத்தில் எடுக்க வேண்டும்.
6. குறித்த தாழமுக்கத்தின் நிறைவில் (28) வடக்கின் திரட்டிய மழைவீழ்ச்சி 120mmக்கு மேற்படாமல் அமைந்திருக்கும்.
7. மீண்டும் நவம்பர் மாதத்தின் 10-17 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தாழமுக்கம் ஒன்று வங்கக் கடலில் உருவாகும்
