கடந்த 24 மணி நேரத்தில் பல பகுதிகளில் நடந்த வாகன விபத்துகளில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் உயிரிழந்தனர்.
தம்புத்தேகம, மாதம்பே, ஊர்காவற்றுறை, ஹபராதுவ, மதவாச்சி, கம்பஹா மற்றும் கடவத்தை ஆகிய பகுதிகளில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தம்புத்தேகம, ஏரியாகம பகுதியில் வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரம் மற்றும் தொலைபேசி கம்பத்தில் மோதி இடம்பெற்ற விபத்தில் அதில் பயணித்த இரு பெண்கள் உயிரிழந்தனர்.
சுன்னாகத்தைச் சேர்ந்த 31 மற்றும் 85 வயதான இரண்டு பெண்களே சம்பவத்தில் மரணித்தனர்.
அதேநேரம், மாதம்பே, புலத் சந்தி பகுதியில் லொறி ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதி இடம்பெற்ற விபத்தில் 52 வயதான மோட்டார் சைக்கிள் செலுத்துனர் உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை வீதியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் 59 வயதான மோட்டார் சைக்கிள் செலுத்துனர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மதவாச்சி, யகாவெவ பகுதியில் பவுசர் மோதி மோட்டார் சைக்கிள் செலுத்துனர் ஒருவர் உயிரிழந்த அதேநேரம், கம்பஹா, உடுகம்பொல பகுதியில் டிப்பர் வாகனம் மோதி மற்றொரு மோட்டார் சைக்கிள் செலுத்துனரும் உயிரிழந்தார்.
இதேவேளை, கடவத்தை, கிரிலாவல பகுதியில் வேன் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் ஹபராதுவ, பாலுவத்த பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி 50 வயதான பெண் பாதசாரி ஒருவர் பலியானார்.
