திருநெல்வேலியில் 27 வயது மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷின் ஆணவப் படுகொலை, தமிழகத்தில் சாதியக் கட்டமைப்பு குறித்த விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
கவின், தலித் கிறிஸ்தவ இளைஞர், தனது பள்ளி நண்பரும், மறவர் சமூகத்தைச் சேர்ந்த சுபாஷினியும் காதலித்து, திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், சுபாஷினியின் சகோதரர் சூர்ஜித், பெற்றோர்—காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி—ஆகியோரின் தூண்டுதலால், கவினை அரிவாளால் வெட்டிக் கொன்றார் என்று கூறப்படுகிறது. ஆனால், கவினின் காதலி இதில் என்னுடைய பெற்றோருக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று வாதிடுகிறார்.
இந்தச் சம்பவம், சாதி ஆணவத்தால் உயிரிழந்த மற்றொரு இளைஞனின் கதையாக மாறியது.கவினின் மரணம் சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியது.
நடிகர் கமல்ஹாசன், “குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்,” எனக் கண்டித்தார். எம்.பி. கனிமொழி, “சாதி ஆணவக் கொலைகளை முற்றிலும் ஒழிக்கப் போராடுவோம்,” என்றார்.
ஆனால், இதே பிரபலங்கள், திருப்புவனத்தில் அஜித் குமார் என்ற மற்றொரு இளைஞர் காவல்துறையால் கொல்லப்பட்டபோது மௌனமாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன.
“ இவர்கள் பேசும் சமூக நீதி தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமா? அப்படி என்றால் அதற்கு எப்படி சமூக நீதி என்று பெயர் வைத்தார்கள்..? சமூகம், சாதி பார்த்து தான் கண்டனம் தெரிவிப்போம் என்றால் இவர்களும் சாதியப் பார்வை கொண்டவர்களே,” என்று விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.
சிலர், “அரசியல் கட்சிகளுக்கு சாதி ஒரு வாக்கு வங்கி கருவி. இதனால், சாதியக் கட்டமைப்பு நீடிக்கிறது,” என வாதிட்டனர். இதற்கிடையில், கவினும் சுபாஷினியும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
இது, சுபாஷினிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. “இப்படியான தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவது மனிதாபிமானமற்ற செயல்,” என இணையவாசிகள் கண்டித்தனர். மேலும், கவினும் சுபாஷினியும் பேசியதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல்கள் என்று சில ஆடியோக்கள் வெளியாகி, சர்ச்சையைத் தூண்டியுள்ளன.
“இவை உண்மையா? யார் இதைக் கசியவிட்டது?” என்ற கேள்விகள் எழ, இதை கேட்கவே காது கூசுது.. இருவரின் தனிப்பட்ட விஷயங்கள் பொதுவெளியில் கசியவிடப்படுவது முறையல்ல.
தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி ஆடியோக்களை பரவவிடும் நபர்கள் மீது கடும் காவல்துறை இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” எனக் கோரிக்கைகள் வலுத்துள்ளன. இந்த ஆடியோக்கள், கவினின் மரணத்தை மறைக்கவோ, சுபாஷினியை மனதளவில் புண்படுத்தவோ முயற்சிக்கும் செயல் என்று விமர்சிக்கப்பட்டது.
“ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை இப்படி அவமானப்படுத்துவது மிக மோசமான செயல்,” என்று பலர் கருத்து தெரிவித்தனர். காவல்துறை, சூர்ஜித்தை கைது செய்து, குண்டர் சட்டத்தில் அடைத்தது. வழக்கு சிபி-சிஐடிக்கு மாற்றப்பட்டது.
கவினின் உடலை ஏற்க மறுத்த அவரது குடும்பம், “குற்றவாளிகளின் பெற்றோரை பணியிலிருந்து நீக்க வேண்டும்,” என வலியுறுத்தியது. இந்தப் படுகொலை, சாதிய மனநிலையை மாற்றுவதற்கு கல்வியும், பொருளாதாரமும் மட்டும் போதாது என்பதை உணர்த்தியது.
“சமூக நீதி, அனைவருக்கும் பொருந்த வேண்டும். ஆனால், இங்கு அது தேர்ந்தெடுக்கப்பட்ட சாதிகளுக்கு மட்டுமே பேசப்படுகிறது,” என்று ஒரு இணையவாசி பதிவிட்டார்.
கவினின் மரணம், சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியிருக்கிறது. ஆனால், இதற்கு தீர்வு காண, உண்மையான மாற்றம் தேவை—வெறும் வார்த்தைகள் போதாது.