மும்பை: பாலிவுட் நடிகை தமன்னா பாட்டியா சமீபத்தில் ஒரு பாலிவுட் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், தனது முகத்தில் ஏற்படும் பருக்களை குணப்படுத்துவதற்கு தான் பின்பற்றும் வித்தியாசமான கை வைத்தியத்தை பகிர்ந்து கொண்டார்.
இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், இதற்கு மருத்துவர் ஒருவர் கடும் எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பேட்டியில், தமன்னாவிடம், “முகத்தில் பருக்கள் ஏற்பட்டால், அதற்கு தோல் மருத்துவரை அணுகுவீர்களா அல்லது வேறு ஏதேனும் வீட்டு வைத்தியம் பின்பற்றுவீர்களா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த தமன்னா, “நான் இதுவரை பருக்களுக்காக மருத்துவரை அணுகியதில்லை. அதிகாலையில் நமது வாயில் உள்ள எச்சிலில் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றன.
எனவே, காலையில் படுக்கையிலிருந்து எழும்போது, எனது எச்சிலை எடுத்து பருக்கள் மீது தடவுவேன். சில நாட்களில் அது குணமாகிவிடும்,” என்று தெரிவித்தார்.இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாக, பலரும் இதனை விமர்சித்தும், ஆதரித்தும் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல மருத்துவரான டாக்டர் சாண்டி ஜாக்கோப் இது குறித்து தனது கருத்தை பதிவு செய்து, தமன்னாவின் முறை ஆபத்தானது என எச்சரித்துள்ளார்.டாக்டர் சாண்டி ஜாக்கோப் கூறுகையில், “நாள் முழுவதும் நமது எச்சிலில் இருக்கும் பாக்டீரியாக்களை விட, அதிகாலை எச்சிலில் அதிக பாக்டீரியாக்கள் உள்ளன. இதில் நல்ல பாக்டீரியாக்கள் இருந்தாலும், கெட்ட பாக்டீரியாக்களும் உள்ளன. எச்சிலை பருக்கள் மீது தடவுவது ஆபத்தானது.
குறிப்பாக, பரு வெடித்த நிலையில் இருந்தால், எச்சிலில் உள்ள பாக்டீரியாக்கள் தோலுக்குள் ஊடுருவி, மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்,” என்றார்.
மேலும், “பருக்களுக்கு மருத்துவ ரீதியாக அடிப்படைக் காரணத்தைக் கண்டறிவது முக்கியம். சிலருக்கு தோலில் உள்ள துவாரங்கள் அடைப்பு, எண்ணெய் சுரப்பிகளின் பாதிப்பு போன்ற காரணங்கள் இருக்கலாம்.
எச்சிலை தடவுவதால் சிலருக்கு தற்காலிகமாக பரு மறையலாம், ஆனால் இது அறிவியல் ரீதியாக சரியான முறையல்ல. அடிக்கடி பருக்கள் வருவது, தழும்புகள், காயங்கள் ஏற்படுவதற்கு மருத்துவரின் ஆலோசனை அவசியம்,” என்று அவர் வலியுறுத்தினார்.
தமன்னாவின் இந்த கருத்து, பாலிவுட் ஊடகங்களின் சர்ச்சைக்குரிய கேள்விகளும், பிரபலங்களின் பதில்களும் மக்களிடையே தவறான புரிதலை ஏற்படுத்துவதாகவே பலர் கருதுகின்றனர்.
“பிரபலங்கள் கூறும் இதுபோன்ற விஷயங்களை பின்பற்றுவதற்கு முன், மக்கள் மருத்துவர்களின் ஆலோசனையை பெற வேண்டும்,” என்று டாக்டர் சாண்டி ஜாக்கோப் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த சர்ச்சை மீண்டும் ஒருமுறை, பிரபலங்களின் கருத்துகள் மக்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை உணர்த்தியுள்ளது. தமன்னாவின் இந்த கை வைத்தியம் பருக்களுக்கு தீர்வாகுமா, அல்லது மருத்துவரின் எச்சரிக்கையை மக்கள் பின்பற்றுவார்களா என்பது சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.