சிறுதானிய உணவு சமைக்காத கோபத்தில் அடித்த அடியில் மனைவி உயிரிழந்த சம்பவத்தில் கணவர் மீது கொலையாகாத மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் அருள்மணி (45). சென்னை அரும்பாக்கம் ஜெய்நகர், 3-வது தெருவில் உள்ள பெண்கள் விடுதியில் வார்டனாக பணியாற்றி அங்கேயே தங்கிவந்தார்.
இவரது கணவர் ராதாகிருஷ்ணன் (50) திருவல்லிக்கேணியில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக பணியாற்றி வருகிறார். அருள்மணி மற்றும் அவரது கணவர் ராதாகிருஷ்ணன் இருவருக்குமே சர்க்கரை நோய் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவுஉணவு கேட்டுள்ளார். அப்போது அருள்மணி `சாதம்தான் இருக்கிறது' எனக் கூறியபோது, `எப்போதும் சாதம்தானா? சிறுதானிய உணவு சமைக்க வேண்டியது தானே' என ராதாகிருஷ்ணன் கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன், அருள்மணியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தபோது அவர் வலிப்பு ஏற்பட்டு, மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். அவர் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பரிசோதித்த மருத்துவர்கள், அருள்மணி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். கோயம்பேடு பேருந்து நிலைய பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.
கொலை செய்யும் நோக்கம் இல்லாமல் நடந்த சம்பவம் என்பதால் கொலையாகாத மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து குறித்த பெண்ணின் கணவர் ராதாகிருஷ்ணனை கைது செய்தனர்.