3,726 மீட்டர் (12,224 அடி) உயரமுள்ள ரிஞ்சானி, இந்தோனேசியாவின் இரண்டாவது உயரமான எரிமலையாகும். இந்த சாகச இடம், அழகிய கடற்கரைகள் மற்றும் பசுமையான இயற்கைக்காக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
ஆனால், இதன் செங்குத்தான பாதைகள் மற்றும் நிலையற்ற வானிலை காரணமாக இது ஆபத்தான மலைப்பயண இடமாகவும் உள்ளது. ஜூலியானா, 2,69,000 பின்தொடர்பவர்களைக் கொண்ட இன்ஸ்டாகிராம் பிரபலமாக, பிப்ரவரி 2025 முதல் தென்கிழக்கு ஆசியாவில் (பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து) பயணித்து, தனது அனுபவங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார்.
ஜூன் 21, 2025 அன்று, ஐந்து நண்பர்கள் மற்றும் ஒரு வழிகாட்டியுடன் ரிஞ்சானி மலையேற சென்றார். உள்ளூர் நேரப்படி காலை 6:30 மணியளவில், சுமார் 2,600 மீட்டர் உயரத்தில் உள்ள செமாரா துங்கல் பகுதியில், சறுக்கலான பாதையில் சோர்வடைந்து ஓய்வெடுக்க கேட்டபோது, வழிகாட்டி மற்றவர்களை அழைத்துச் சென்று, அவரை தனியாக விட்டதாக அவரது சகோதரி தெரிவித்தார்.
அவர் மீண்டும் திரும்பியபோது, ஜூலியானா 600 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் தவறி விழுந்திருந்தார்.ட்ரோன் காட்சிகள் மூலம், அவர் உயிருடன், மணலில் சிக்கி, உதவி கோரி அலறுவது முதல் நாள் கண்டறியப்பட்டது.
ஆனால், அடர்ந்த பனி, நிலையற்ற மணல், மற்றும் செங்குத்தான நிலப்பரப்பு காரணமாக மீட்பு பணிகள் தடைபட்டன. 50 பேர் கொண்ட மீட்புக் குழு, மூன்று ஹெலிகாப்டர்கள், மற்றும் தெர்மல் ட்ரோன்களைப் பயன்படுத்தியும், வானிலை மற்றும் நிலப்பரப்பு சவால்கள் காரணமாக மீட்பு தாமதமானது.
ஜூன் 24 அன்று, மீட்பு குழு அவரை அடைந்தபோது, உயிர் பிரிந்திருந்தது. ஜூன் 27 அன்று, பாலி மந்தாரா மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், உறுப்பு பாதிப்பு மற்றும் எலும்பு முறிவுகளால் ஏற்பட்ட உள் ரத்தக்கசிவு மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டது.
மரணம், வீழ்ச்சிக்கு சில மணி நேரங்களில் நிகழ்ந்ததாக மருத்துவர் இடா பாகுஸ் அலித் கூறினார்.ஜூலியானாவின் குடும்பம், மீட்பு குழுவின் “புறக்கணிப்பை” குற்றம்சாட்டி, “7 மணி நேரத்தில் அவரை அடைந்திருந்தால் உயிர் பிழைத்திருக்கலாம்” என சமூக வலைதளங்களில் தெரிவித்தனர்.
இந்த சம்பவம், ரிஞ்சானியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. 2022இல் ஒரு போர்ச்சுகீசியரும், 2025 மே மாதம் ஒரு மலேசியரும் இதே மலையில் உயிரிழந்துள்ளனர்.
பிரேசில் அரசு, அவரது உடலை திருப்பி அனுப்புவதற்கு செலவை ஏற்று, புதிய ஆணையை (12.535) வெளியிட்டது. இந்த சம்பவம், இணையத்தில் பரவி, உலகளவில் விவாதத்தைத் தூண்டியுள்ளது.