யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அகற்றப்படுவதே அங்கு நிலவும் பிரச்சினைக்குத் தீர்வு என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
சட்டவிரோதமாக இராணுவத்தினர் இந்த விகாரையை நிர்மாணித்தமை இன நல்லிணக்கத்துக்கு பாதகமா அல்லது விகாரை இல்லாத ஓர் இடத்தில் கட்டப்பட்ட விகாரையை அகற்றக்கோருவது நல்லிணக்கத்துக்குப் பாதகமா என கஜேந்திரகுமார் கேள்வியெழுப்பியுள்ளார்.
இலங்கையின் சூரியன் வானொலியில் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இதனைக் கூறினார்.
பேரினவாதம் எப்போதும் தம்முடைய நிகழ்ச்சி நிரலை மாத்திரமே பார்ப்பதாக கஜேந்திரகுமார் குறிப்பிட்டார்.
தென்னிலங்கையில் வீதிகளை நிர்மாணிப்பதற்காகவும் மற்றும் வேறு பல விடயங்களுக்காகவும் சாதாரணமாக விகாரைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் எனவே தையிட்டி விகாரையை அகற்றக்கோருவதனை மாத்திரம் ஏன் நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் விடயமாக பார்க்க வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வியெழுப்பியுள்ளார்.