2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக மாகாண, பிராந்திய மற்றும் பிரதேச மட்டத்திலான கல்வி மற்றும் நிர்வாக அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் கிழக்கு மாகாணத்திற்கான விழிப்புணர்வு கலந்துரையாடல் பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது.
13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிழக்கு மாகாண கல்வி திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது
தற்போதைய கல்வி முறையில் மாற்றம் தேவை எனவும், பாடசாலைகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
ஆசிரியர் அதிபர் மற்றும் கல்வி நிர்வாக வெற்றிடங்கள் தொடர்பாக அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அவை தீர்க்கப்பட வேண்டும் என்றும், இந்தக் கல்விச் சீர்திருத்தத்தை தனியாக பார்க்காமல் முழுமையான செயல்முறையாகப் பார்க்க வேண்டும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
புதிய கல்வி சீர்திருத்தத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் பாடத்திட்ட திருத்தங்கள், மதிப்பீடு மற்றும் மதிப்பீட்டு முறை, உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
ஆசிரியர்- அதிபர் மற்றும் கல்வி நிர்வாக வெற்றிடங்களை குறைத்தல், மாகாண சபைகளுக்கும் மத்திய அரசாங்கத்துக்கும் இடையிலான முறையான ஒருங்கிணைப்பு, மாகாண சபை மட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குதல் போன்ற விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.,