காசோலை மோசடிக்காரர்களுக்கு வருகிறது புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்பட உள்ள ஒரு திருத்தத்தின் கீழ் வங்கியில் போதுமான நிதி இல்லாமல் காசோலையை வழங்கும் ஒருவர், அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. போதுமான நிதி இல்லாமல் காசோலைகளை வழங்குபவரும், மூடிய கணக்கிலிருந்து காசோலைகளை வழங்குபவருக்கும் இந்த சட்டம் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 6 மாதங்களுக்கு உட்பட்ட காசோலை ஒன்றை பெறுபவரிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக பணம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு, 90 நாட்களுக்குள் காசோலையை வழங்கியவர் பணம் செலுத்தத் தவறினால், அவருக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கும் விதிகள் பரிமாற்ற அவசரச் சட்டத்தில் கீழ் இந்த திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்த திருத்தங்களின் கீழ், விதிக்கப்படும் அபராதம் காசோலைக்கு சமமான தொகையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வங்கிகளுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குவதே இந்தத் திருத்தத்தின் நோக்கம் என்று நீதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரியை கோடிட்டு செய்தி வெளியாகியுள்ளது.