தன்னைவிட வயது குறைவு என கூறி ஆசிரியை, வாலிபரின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
மைசூரு, கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம், பாண்டவபுராவின் எலிகெரேயை சேர்ந்தவர் பூர்ணிமா (36). திருமணமான இவர், கணவரை பிரிந்து மைசூரில் கிருஷ்ணமூர்த்திபுரத்தில் தங்கி தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அதுபோல் மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகா கியதனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அபிஷேக் (26). இவர் ஆசிரியை பூர்ணிமாவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தித்துள்ளார். அன்று முதல் அவர் பூர்ணிமாவை காதலிப்பதாக கூறி வந்துள்ளார். ஆனால் பூர்ணிமா காதலிக்க மறுத்துள்ளார்.
இருப்பினும் அபிஷேக் ஒருதலையாக பூர்ணிமாவை காதலித்து வந்துள்ளார். மேலும் தொடர்ந்து ஆசிரியை பூர்ணிமாவை பின்தொடர்ந்து வந்து காதலிக்கும்படி வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் தன்னைவிட உங்களுக்கு வயது குறைவு என கூறி பூர்ணிமாக அபிஷேக்கின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அபிஷேக் தன்னை காதலிக்க மறுக்கும் பூர்ணிமா வேறு யாரையும் திருமணம் செய்ய கூடாது என முடிவு செய்து அவரை கொலை செய்யவும் திட்டமிட்டார். அதன்படி நேற்று முன்தினம் மாலை அபிஷேக் பூர்ணிமாவை சந்தித்த அபிஷேக் உங்களிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என கூறி லட்சுமிபுரம் பகுதியில் உள்ள அம்பேத்கர் பூங்காவுக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு வைத்து அபிஷேக், தன்னை காதலிக்கும் படி அவரிடம் கூறி தகராறு செய்துள்ளார். அப்போதும் பூர்ணிமா காதலிக்க முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அபிஷேக் தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து பூர்ணிமாவின் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார். இதையடுத்து பூர்ணிமா ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். அதையடுத்து அபிஷேக்கே, பூர்ணிமாவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பின்னர் அங்கிருந்து அபிஷேக் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த பூர் ணிமாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் லட்சமிபுரம் போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது தான் அபிஷேக் ஒரு தலையாக பூர்ணிமாவை காதலித்து வந்ததும், காதலிக்க மறுத்த ஆத்திரத்தில் அவரை அபிஷேக் கத்தியால் சரமாரியாக குத்தியதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அபிஷேக்கை தேடி வந்தனர். நேற்று காலை அபிஷேக்கை கைது செய்தனர். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பூர்ணிமா சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, கைதான அபிஷேக்கிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உயிருக்கு போராடிய ஆசிரியைக்கு தாலிக்கட்டி 'செல்பி' எடுத்த கொடூரம் பள்ளி ஆசிரியை பூர்ணிமா தன்னை காதலிக்க மறுத்ததால், அவர் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. தனக்கு கிடைக்காத பூர்ணிமா வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்ற ஆத்திரத்தில் அபிஷேக் அவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத பூர்ணிமா நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். அவர் குற்றுயிரும்-குலையுருமாக உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த பூர்ணிமாவுக்கு, அபிஷேக் ஈவுஇரக்கமின்றி மஞ்சள் கயிறு தாலியை கட்டியுள்ளார். பின்னர் அவருடன் அருகில் படுத்து அபிஷேக் தனது செல்போனில் செல்பி படம் எடுத்துள்ளார். பின்னர் அதனை தனது வாட்ஸ்-அப் ஸ்டேட்டசாக வைத்துள்ளார். அதுபோல் பூர்ணிமாவின் செல்போன் வாட்ஸ்அப்பிலும் அந்த படத்தை ஸ்டேட்டசாக போட்டுள்ளார். தற்போது பூர்ணிமாவுடன் அவர் எடுத்த செல்பி படம் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.