கர்நாடக மாநிலம் கலபுரகி புறநகர் யாத்ராமி பகுதியில் உள்ள கஸ்தூரி பாய் காந்தி உண்டு, உறைவிடப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வரும் விஜயாஸ்ரீ பட்டீல் மீது திடீர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தினமும் பள்ளி ஊழியர்களை மசாஜ் செய்யும்படி கட்டாயப்படுத்துவதாகவும், கைகள் மற்றும் கால்களை பிடிக்கும்படி கூறுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, கடந்த ஜூலை 18-ஆம் தேதி, பள்ளியில் உதவியாளராக பணியாற்றும் ஒரு பெண் ஊழியரை விஜயாஸ்ரீ மிரட்டி மசாஜ் செய்ய வற்புறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த பெண் முதலில் மறுத்தபோதும், தொடர்ந்து மிரட்டலுக்கு உள்ளாகி, வேறு வழியின்றி விஜயாஸ்ரீயின் தோள்பட்டையை இரு கைகளால் மசாஜ் செய்துள்ளார்.
இந்த சம்பவம் பள்ளியில் பணியாற்றும் ஒருவரால் செல்போனில் பதிவு செய்யப்பட்டு, சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த வீடியோ மாணவ, மாணவிகளின் பெற்றோர் வாட்ஸ்அப் குழுவிலும் பகிரப்பட்டதாக கூறப்படுகிறது.
வீடியோவை பார்த்த பெற்றோர் அதிர்ச்சடைந்து, கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து, விஜயாஸ்ரீ மீது உடனடி நடவடிக்கை கோரியுள்ளனர். நடவடிக்கை இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இது போன்ற நடவடிக்கைகள் பள்ளி சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர்.
கல்வித்துறை இதுவரை இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை, ஆனால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்ந்து விவாத பொருளாக உள்ள நிலையில், பள்ளியின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன