பாப்பாக்குடி அருகே சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நடைபெற்ற பகுதியில் விசாரணை நடத்திய போலீஸார்.
திருநெல்வேலி: பாப்பாக்குடி பகுதியில் காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்ட முயன்ற 17 வயது சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி காவல் சரகத்துக்கு உட்பட்ட இந்திரா காலனி சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகன் சக்திகுமார் (22). அப்பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாற்று சமூகத்தைச் சேர்ந்த 2 சிறுவர்களின் சட்டவிரோத செயல்கள் குறித்து காவல் துறைக்கு இவர் தகவல் அளித்ததாகத் தெரிகிறது. இதனால், அவர் மீது அச்சிறுவர்கள் ஆத்திரம் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், அங்குள்ள ரஸ்தாவூர் குளத்துக்கு சக்திகுமாரை நேற்று முன்தினம் அச்சிறுவர்கள் வரவழைத்துள்ளனர். தாங்கள் செய்யும் செயல்கள் குறித்து காவல் துறையினரிடம் எப்படி தெரிவிக்கலாம் என்று கேட்டு சக்திகுமாரை அரிவாளால் தாக்கியுள்ளனர். இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. சக்திகுமார் அங்கிருந்து தப்பியோடி, அருகில் உள்ள வீட்டுக்குள் சென்று ஒளிந்துகொண்டார். அவரைத் தேடி அரிவாளுடன் 2 சிறுவர்களும் சுற்றிக்கொண்டிருந்தனர்.
இது குறித்து தகவலறிந்து பொலிஸார் அங்கு சென்றபோது, அவர்களை அந்த சிறுவர்கள் அரிவாளால் தாக்கியுள்ளனர். இதில் சிறப்பு காவல் படையை சேர்ந்த ரஞ்சித் என்ற காவலருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, பாப்பாக்குடி காவல் உதவி ஆய்வாளர் முருகன் அங்குவந்து, அராஜகத்தில் ஈடுபட்டிருந்த 2 சிறுவர்களையும் கண்டித்தார். ஆனால், அச்சிறுவர்கள் உதவி ஆய்வாளரையும் அரிவாளால் வெட்ட முயற்சித்தனர். அங்கிருந்து தப்பியோடிய உதவி ஆய்வாளர், அருகில் உள்ள வீட்டுக்குள் தஞ்சம் புகுந்தார். அவரை பின்தொடர்ந்து அரிவாளுடன் வந்த அச்சிறுவர்கள், அந்த வீட்டின் கதவுகளை வெட்டி சேதப்படுத்தி, உள்ளே இருந்த உதவிஆய்வாளர் மற்றும் வீட்டிலிருந்த பெண், அவரது மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே காவல் உதவி ஆய்வாளர் முருகன் துப்பாக்கியால் சுட்டார். இதில் ஒரு சிறுவனின் மார்பில் குண்டு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, காயமடைந்த சக்திகுமார் மற்றும் 17 வயது சிறுவனை போலீஸார் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. எஸ்.பி.சிலம்பரசன் அங்கு சென்று, விசாரணை மேற்கொண்டார். அப்பகுதியில் ஏராளமான பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காவல் துறை விளக்கம்: திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘எஸ்.ஐ.யை வெட்ட முயன்ற சிறுவர்களிடம் இருந்து, தனது உயிரையும், அருகில் இருந்தவர்கள் உயிரையும் காப்பாற்றும் நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிறுவன் தற்போது நலமுடன் உள்ளார். மற்றொரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். இருவர் மீதும் ஏற்கெனவே பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்
குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனிசாமி கண்டனம்: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சமூக வலைதளத்தில், ‘‘நெல்லை பாப்பாக்குடி சம்பவம், திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்குஎந்த அளவுக்கு அவல நிலைக்குச் சென்றுள்ளது என்பதை உணர்த்துகிறது. சிறுவர்கள்கூட போதைப் பொருளால் பாதிக்கப்பட்டு, குற்றச்செயலில் ஈடுபடுவது வேதனைக்குரியது. சட்டம்-ஒழுங்கையே பாதுகாக்க முடியாத திமுக ஆட்சியை அகற்றுவதே, தமிழகத்தை மீட்பதற்கான முதல்படி’’ என்று தெரி வித்துள்ளார்.