அமெரிக்காவில் உள்ள தேசிய அறிவியல் அகடமி (PNAS) வெளியிட்டுள்ள ஆய்வு, அமெரிக்கா மற்றும் கனடாவில் ஏற்பட உள்ள பேரழிவு தொடர்பில் தகவல்களை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் இருந்து கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா வரை நீண்டுள்ள பகுதி காஸ்கேடியா துணை மண்டலம் என அழைக்கப்படுகிறது.
இந்த காஸ்கேடியா பகுதியில், 9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக 100 அடி உயர சுனாமி ஏற்படும் வாய்ப்புள்ளது. இதில் கனடா மற்றும் அமெரிக்காவின் முக்கிய பகுதிகள் சில நிமிடங்களில் 0.5 முதல் 2 மீட்டர் வரை மூழ்கக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பேரழிவு நிகழ்வு 2100ஆம் ஆண்டுக்குள் நிகழும் என்பது கிட்டத்தட்ட உறுதி என்றும், அடுத்த 50 ஆண்டுகளில் எந்த நேரத்திலும் இது தாக்கக்கூடிய வாய்ப்பு 37 சதவீதம் உள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
காஸ்காடியாவில் அடுத்த பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் 5,800 பேர் உயிரிழப்பார்கள் மற்றும் 100,000 பேர் காயமடைவார்கள். கிட்டத்தட்ட 618,000 கட்டிடங்கள் சேதமடையும் அல்லது அழிக்கப்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக ஏற்படும் சுனாமி மேலும் 8,000 பேரின் மரணத்திற்கு வழிவகுக்கும். இதனால் 134 பில்லியன் டொலர் பொருளாதார இழப்பு ஏற்படும் என்று மத்திய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் (FEMA) மதிப்பிட்டுள்ளது.
அதேவேளை, ஒவ்வொரு ஆண்டும் பல கடலோரப் பகுதிகள் படிப்படியாக மூழ்கிவரும் நிலையில், வாஷிங்டன், ஓரிகான் மற்றும் வடக்கு கலிபோர்னியாவின் சில பகுதிகளில் ஏற்படும் ஆழமான நிலத்தடி நகர்வுகள் காரணமாக அஸ்டோரியா கிரசண்ட் சிட்டி போன்ற நகரங்களில், நிலம் கடல் மட்டத்தை விட வேகமாக உயர்ந்து வருகிறது.
வடக்கு கலிபோர்னியாவில் உள்ள ஹம்போல்ட் விரிகுடா நிலம் நீரில் மூழ்கி வருகிறது. 2050ஆம் ஆண்டில், நீர் மட்டங்கள் 10 முதல் 30 சென்டிமீட்டர் வரை உயரக்கூடும் என்றும், 2100 ஆம் ஆண்டில், கார்பன் வெளியேற்றம் அதிகமாக இருந்தால், கடல் மட்டம் 40 முதல் 90 சென்டிமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த வளர்ந்து வரும் ஆபத்தால், எதிர்காலத்தில் ஏற்பட உள்ள சேதத்தைக் குறைக்க அதிக கவனம், திட்டமிடல் மற்றும் நடவடிக்கை தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.