எதிர்வரும் 15ஆம் திகதியில் இருந்து இலங்கை கடல் எல்லையில் கடற்படை ஊடாக தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதோடு, அத்துமீறி வருகின்ற இந்திய கடற்றொழிலாளர்களையும், அவர்களின் படகுகளையும் கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடற்றொழில் அமைச்சர் உறுதியளித்துள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று (12) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ”இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய வருகையை தடுக்க இலங்கை அரசும், கடற்றொழில் அமைச்சும் தீவிரமாக இருக்கிறது. கடற்படையும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறார்கள்.
எதிர்வருகின்ற 15ஆம் திகதி தமிழக கடற்றொழிலாளர்களின் அத்து மீறிய எல்லை தாண்டிய வருகை தொடர்பாகவும், குறித்த விடயம் தொடர்பாக அரசு முன்னெடுக்க திட்டமிட்டுள்ள விடையம் தொடர்பாகவும் வட பகுதி கடற்றொழிலாளர்கள்
சார்பாக நாங்கள் எதிர்நோக்க உள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காகவும் நாங்கள் அமைச்சர் அலுவலகத்திற்கு சென்றிருந்தோம்.
தமிழக கடற்றொழிலாளர்களின் 60 நாள் கடற்றொழில் தடைக்காலம் இம்மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.15 ஆம் திகதிக்கு பின்னர் அவர்களின் எல்லை தாண்டிய வருகை நிச்சயமாக எமது கடல் பகுதியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதை அரசாங்கமும் கடற்றொழில் அமைச்சும் எவ்வாறு தடுக்க இருக்கிறது என்பது குறித்து கலந்துரையாடப்பட்டது” என குறிப்பிட்டுள்ளார்.