அமெரிக்க அதிபர் டிரம்ப் கொடுத்த வார்னிங்கை, ஈரான் கொஞ்சம் கூட மதிக்கவில்லை. இந்நிலையில் தற்போது ஈரானில் இணைய சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இன்றிரவு அமெரிக்கா, நேரடியாக களத்தில் இறங்கலாம் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.
ஈரான் நேரப்படி, மாலை 5.30 மணியிலிருந்து இணைய சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் சேதம் ஏற்பட்டு, அதனால் சேவை துண்டிக்கப்படவில்லை. மாறாக ஈரான் அரசே இணைய சேவையை துண்டித்திருக்கிறது. இதனை நெட்ப்ளாக்ஸ் (NetBlocks) மற்றும் கென்டின் (Kentinc) போன்ற இணைய இணைப்பு கண்காணிப்பு நிறுவனங்கள் உறுதி செய்திருக்கின்றன.
இது குறித்து அந்நாட்டின் அரசு செய்தித் தொடர்பாளர் ஃபாத்திமே மொஹாஜெரானி கூறுகையில், "இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உள்கட்டமைப்புகள் சேதமடைந்திருப்பது உண்மைதான். ஆனால், அதற்காக இணைய சேவை துண்டிக்கப்படவில்லை. மாறாக இஸ்ரேலிய சைபர் தாக்குதல்களை தவிர்க்கவே நாங்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். அரசு அதிகாரப்பூர்வமாக இந்த உத்தரவை கொடுத்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.
இணைய சேவை துண்டிக்கப்பட்டிருப்பதால், வெளிநாட்டு இணையதளங்களை அணுகப் பயன்படுத்தப்படும் VPN (Virtual Private Network) சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற பிரபலமான சமூக ஊடகப் பயன்பாடுகளும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன. மட்டுமல்லாது, Google Play Store மற்றும் Apple App Store ஆகியவையும் பிளாக் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் புதிய ஆப்களை பதிவிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கெல்லாம் மாற்றாக, ஈரான் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட உள்ளூர் வெப்சைட்கள் ஓபனாகின்றன. இது 'ஹலால் நெட்' (Halal Net) என்று அழைக்கப்படுகிறது. ஆனால், என்னதான் நெட்வொர்க் முடக்கப்பட்டிருந்தாலும், எலான் மஸ்கின் 'ஸ்டார்லிங்க்' இணைய சேவையை வழங்க முன் வந்திருக்கிறது. இது அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகளைத் தாண்டி இணைய சேவையை வழங்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்டெர்நெட் சேவையை முடக்கியதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒன்று, மேலே சொன்னதை போல.. இஸ்ரேலின் சைபர் தாக்குதல். சைபர் தாக்குதலில் இஸ்ரேல் எவ்வளவு கை தேர்ந்தது என்பதை உலகம் அறியும்.
இரண்டாவது காரணம் அமெரிக்காவின் தாக்குதல் அச்சுறுத்தல். அதாவது இன்று இரவு அமெரிக்கா நேரடியாக தாக்குதுலை நடத்தக்கூடும் என்பதால் நெட்வொர்க் சேவை முடக்கப்பட்டிருக்கிறது என சொல்லப்படுகிறது. ஆனால், அமெரிக்காவின் தாக்குதல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இன்னும் கிடைக்கவில்லை. இதற்கு முன்னர் காசாவில், இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடங்குவதற்கு முன்னர் அப்பகுதியில் இணைய சேவையை துண்டித்திருந்தது என்பது கவனிக்கத்தக்கது.