குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 242 பேருடன் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார்.
விமானம் விழுந்ததில் விடுதி மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள சிலரும் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 270ஐ தாண்டியது.
இந்நிலையில், அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கு டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகரன் 'மன்னிப்பு' கோரியுள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்த வௌியிட்ட சந்திரசேகரன், "விமான விபத்து குறித்து கேள்விப்பட்டதும் அதிர்ந்துவிட்டேன். அதை புரிந்துகொள்ளவே எனக்கு சில நிமிடங்கள் ஆகின. விபத்து குறித்து கேள்விப்பட்டதும், விமானத்தில் பயணித்தவர்கள் உயிர் பிழைக்க வேண்டும் என வேண்டிக்கொண்டேன். 'கடவுளே என்ன இது?' எப்படியாவது அனைவரும் பிழைத்துவிட வேண்டும் என்பதுதான் எனது எண்ணமாக இருந்தது. அதன்பிறகு என்னை நானே தேற்றிக்கொண்டு உடனடியாக விமான நிலையம் புறப்பட்டு விட்டேன்.
விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல கூட வார்த்தைகள் இல்லாத மிகவும் கடினமான சூழ்நிலையில் இருக்கிறேன்.
டாடா நடத்தும் விமான நிறுவனத்தில் இந்த விபத்து நடந்ததற்கு நான் மிகவும் வருந்துகிறேன். இந்த நேரத்திலும் அதற்குப் பிறகும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.