இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் முடிவு பெறுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இதுகுறித்து, டிரம்ப்பின் சமூக வலைப்பக்கத்தில் கூறியதாவது, அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இஸ்ரேலும் ஈரானும் போர்நிறுத்தத்துக்கு முழுமையாக ஒப்புக்கொண்டன.
இரு நாடுகளின் இராணுவ நடவடிக்கைகளும் முடிந்தவுடன், சுமார் 6 ஆறு மணிநேரத்தில் ஈரான் போர் நிறுத்தத்தைத் தொடங்கும். அதனைத் தொடர்ந்து, 12 மணிநேரத்தில் இஸ்ரேலும் போர்நிறுத்தத்தைத் தொடங்கும். அடுத்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் - ஈரான் இடையிலான 12 நாள் போரின் முடிவு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.
இந்தப் போர், பல ஆண்டுகளாக நடந்து, மத்திய கிழக்கையே அழித்திருக்க வேண்டிய ஒரு போராக அமைந்திருக்கும். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை; அது ஒருபோதும் நடக்காது.
இஸ்ரேல், ஈரானை கடவுள் ஆசிர்வதிப்பார்; மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்காவையும் கடவுள் ஆசிர்வதிப்பார். உலகை கடவுள் ஆசிர்வதிப்பார் என்று தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
இதனைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து, நேற்றிரவு கட்டாரில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இருப்பினும், தாக்குதல் குறித்த முன்னறிவிப்புக்காக ஈரானுக்கு டிரம்ப் நன்றி தெரிவித்தார்.
இந்த நிலையில்தான், இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர்நிறுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.