தீவிரமடையும் இஸ்ரேல், ஈரான் யுத்தம் - ஈரானில் நிலை என்ன?
இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் நான்காவது நாளாக இன்றும் தொடர்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஈரானின் அணுமின் நிலையங்கள் உட்பட பல இடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் 6 மூத்த அணு விஞ்ஞானிகள், ஈரான் புரட்சிகர காவல்படை தலைவர் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக அன்றிரவே இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. அதனைத் தொடர்ந்து இரு தரப்பும் மாறிமாறி கடுமையாக தாக்குதல் நடத்தி வருகின்றன.
சமீபத்திய தாக்குதலில் ஈரான் புரட்சிகர காவல்படை உளவுப்பிரிவின் தலைவர் முகமது கசெமி கொல்லப்பட்டுள்ளார்.
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 224 பேர் கொல்லப்பட்டதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஈரான் தெரிவித்தது. தற்போது தெஹ்ரானை முழு வான்பரப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் கூறுகிறது.
அமெரிக்கா ஈரான் இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர வேண்டுமென்றால், ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை அமெரிக்கா கண்டிக்க வேண்டும் என ஈரான் கேட்டுக்கொண்டுள்ளது.
இருப்பினும், ஈரான் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா நேரடியாக களத்தில் இறங்கும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது ஒருபுறமிருக்க, இஸ்ரேல் மீது ஈரான் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலின் தேசிய அவசர சேவை கூறுகிறது.
சமாதான பேச்சுக்கு இடமில்லை என தெரிவித்துள்ளது ஈரான் தரப்பு, இதனால் மத்திய கிழக்கில் பதற்ற நிலை மேலும் நீடிக்கலாம்!
©️Tamilplus.lk