புனேவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கண்களை சிறுநீரால் கழுவும் வீடியோவை பதிவிட்டிருந்த நிலையில், பலரும் அவரின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
புனேவைச் சேர்ந்தவர் நூபுர் பிட்டி. இவர் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்த வீடியோ மருத்துவ உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பெண் தினமும் காலையில் தனது சிறுநீரில் கண்களை கழுவுவதாக தெரிவித்துள்ளார்.
அதோடு, அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், ‘Urine Eye Wash — Nature’s Own Medicine’ என்ற தலைப்பில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதாவது, தினந்தோறும் காலை நேரத்தில் எனது சிறுநீரில் கண்களை கழுவுவதால் கண்ணில் ஏற்படும் வறட்சி, எரிச்சல் மற்றும் சிவத்தல் உள்ளிட்ட பிரச்சினையில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது என்றும் இது இயற்கை மற்றும் மாற்று சிகிச்சைமுறை மீதான தனது நம்பிக்கை என்றும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வெளியான நிலையில், மருத்துவர்கள் பலரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கண் பராமரிப்புக்கு சிறுநீர் பாதுகாப்பானது அல்ல. இது போன்ற செயல் கண் எரிச்சல், தொற்று மற்றும் பார்வை இழப்பு உள்ளிட்ட தீங்குகளை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் பொதுமக்களை எச்சரிக்கின்றனர். குறிப்பாக, சிறுநீரக மருத்துவர் டாக்டர் ஜெய்சன் பிலிப், “இது மாதிரியான செயல்களை ஒருபோதும் செய்யாதீர்கள். உங்களையே நீங்கள் காயப்படுத்திக் கொள்ளாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.