விளையாட்டுத்துறையில் காணப்படும் ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதுடன், வளப்பற்றாக்குறைகளையும் பூர்த்திசெய்க - ரவிகரன் - எம்.பி
வடக்குமாகாணத்தில் விளையாட்டுத்துறையில் காணப்படும் ஆளணிவெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதுடன், முல்லைத்தீவு மாவட்டம் உள்ளிட்ட வன்னிப் பகுதியில் விளையாட்டுத்துறை சார்ந்து காணப்படும் வளப்பற்றாக்குறைகளையும் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கைவிடுத்துள்ளார்.
பாராளுமன்றில் நேற்று (17) உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாண விளையாட்டுத்துறையில் பல தேசியப் பதக்கங்களை வடமாகாணம் பெற்றுக்கொண்டபோதும், வடக்குமாகாண விளையாட்டுத்துறையின் செயற்பாட்டிற்காக வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தில் ஆளணிப் பற்றாக்குறை நிலவுகின்றது.
வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களுக்கும் ஐந்து மாவட்ட உத்தியோகத்தர்கள் தேவையான நிலையில் மூன்று நிரந்தர மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்களே காணப்படுகின்றனர். அதேவேளை 24பயிற்றுனர்கள் தேவையான நிலையில் 16பயிற்றுனர்களும், 33விளையாட்டு உத்தியோகத்தர்கள் தேவையானநிலையில் 25விளையாட்டு உத்தியோகத்தர்களும் காணப்படுகின்றனர்.
அத்தோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் விளையாட்டு உத்தியோகத்தர்கள் ஆறுபேர் தேவையானநிலையில் இரண்டு விளையாட்டு உத்தியோகத்தர்களே காணப்படுவதுடன், பயிற்றுநர்கள் ஐவர் தேவையானநிலையில் இரண்டு பயிற்றுநர்கள் மாத்திரமே காணப்படுகின்றனர்.
வடமாகாண விளையாட்டுத் திறனை மேம்படுத்த, காணப்படுகின்ற வெற்றிடங்களை நிரப்பதுரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.
இலங்கையிலேயே முல்லைத்தீவு மாவட்டத்தில்தான் கரப்பந்து, வலைப்பந்து மற்றும், கூடைப்பந்து விளையாடக்கூடியதான உள்ளக அரங்கு இல்லாதநிலை காணப்படுகின்றது. இதுதவிர நீச்சல்தடாகமும் அற்றஇடமாக முல்லைத்தீவு மற்றும், மன்னார் மாவட்டங்கள் காணப்படுகின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் விளையாட்டு வீரர்களுக்கான உடல்வலுவூட்டல் பயிற்சிநிலையம்கூட இல்லாத நிலை காணப்படுவதுடன், பயிற்சி உபகரணங்களும் இல்லாத நிலமை காணப்படுகின்றது. அவ்வாறு உபகரணங்கள் கிடைப்பதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டால் எமது இளைஞர்களும் சிறப்பானமுறையில் விளையாட்டில் இன்னும் பிரகாசிக்கக்கூடிய நிலை ஏற்படுமென உறுதியாக நம்புகின்றேன்.
அதேவேளை மாவட்டங்கள்தோறும் அமைக்கப்பட்ட விளையாட்டுக் கட்டத்தொகுதியும் இங்கு அமைக்கப்படவில்லை.
விளையாட்டு உபகரணங்களின் பற்றாக்குறை, மாகாண மற்றும், தேசியரீதியில் பதக்கங்களைப்பெற்றவர்களுக்குக்கூட தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை. தொழில் வாய்ப்புக்களில் முன்னுரிமை வழங்கப்படவில்லை.
மாகாண விளையாட்டுத் திணைக்களத்திற்கு ஓர் பேரூந்து வழங்கப்படுமாயின் விளையாட்டுச் செயற்பாடுகளை மேம்படுத்தலாமென்பது எனது ஆலோசனை.
அத்தோடு மாணவர்களுக்குத் தொடச்சியான ஊட்டச்சத்துவழங்கலுடன், பயிற்சிகளை வழங்கினால் விளையாட்டுத்திறன் அதிகரிக்கும்.
பின்தங்கிய மாவட்டமென்று எம்மை ஒதுக்கிவிடாது, விளையாட்டுத்துறையில் எமது இளைஞர்களுக்கு சிறந்த வசதிவாய்ப்புக்களை வழங்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.
விளையாட்டுக் கட்டடத்தொகுதியொன்றை முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கவேண்டுமென்ற பலருடைய கோரிக்கைகள் ஆராயப்பட்டு, கட்டடத்தொகுதி அமைப்பதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டது. பின்பு அந்தவிடயம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அதேவேளை மாவட்டத்திற்கு விளையாட்டுக் கட்டடத்தொகுதி என்ற வகையில் மன்னார் நறுவிலிக்குளத்தில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி ஆரம்பிக்கப்பட்டு இன்னும் முடிவுறுத்தப்படவில்லை. இதற்கான முயற்சிகளையும் துரிதமாகச்செய்து முடிவுறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.
இதுதவிர முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு விளையாட்டுக் கட்டடத்தொகுதிக்கான காணி தெரிவுசெய்யப்பட்டு நிலஅளவைசெய்யப்பட்டதுடன், மண் மற்றும், நீர் பரிசோதனைகளும் பூர்த்திசெய்யப்பட்டிருந்தும் அந்த வேலைகள் அனைத்தும் முன்னைய அரசின் காலத்தில் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. ஆனால் நிறைவான விளையாட்டுவீரர்கள் மாவட்டத்திலுள்ளார்கள்.
கடந்தகால கொடூர யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மன அழுத்தங்களுக்குள்ளான நிலையிலிருக்கும் இளைஞர், யுவதிகளை மனஉழைச்சல்இருந்து விடுவிக்கவும் மேற்குறித்த விளையாட்டுக் கட்டடத்தொகுதி அமைத்து பின்தங்கிய எமது மாவட்டத்திற்கு உதவவேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.