உலக அளவில் குழந்தை திருமணங்கள் அதிகம் நடக்கும் நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் விளங்குகிறது. பாகிஸ்தானில் உள்ள பெண் குழந்தைகளில் ஐந்தில் ஒருவர் 18 வயதுக்கு உள்ளாகவே திருமணம் செய்துவைக்கப்படுவதாக UNICEF கூறியுள்ளது.
இந்நிலையில் குழந்தை திருமணங்களுக்கு எதிரான ஒரு முக்கிய நடவடிக்கையாக, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி "இஸ்லாமாபாத் பிரதேச குழந்தை திருமண தடை மசோதா 2025" சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த சட்டம், இஸ்லாமாபாத் தலைநகர் பிரதேசத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை 18 ஆக நிர்ணயித்துள்ளது. இந்த சட்டத்தை மீறுவோருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பெருந்தொகை அபராதம் விதிக்கப்படும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பெரியவர்களும், சிறார்களும் ஒன்றாக வாழ்வது சட்டரீதியான பாலியல் வன்புணர்வாகவும் (statutory rape) இந்த சட்டம் கூறுகிறது.
இந்த சட்டத்திற்கு பழமைவாத மத குழுவான இஸ்லாமிய சித்தாந்த கவுன்சிலிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இஸ்லாமிய சட்டங்களுக்கான அரசின் ஆலோசகரான CII, இந்த மசோதாவை "இஸ்லாமிய விரோதமானது" என்று அறிவித்துள்ளது. திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை 18 ஆக நிர்ணயிப்பது இஸ்லாமிய போதனைகளுக்கு எதிரானது என்றும், பருவம் அடைந்த உடன் திருமணம் செய்ய இஸ்லாம் அனுமதிப்பதாகவும் இஸ்லாமிய சித்தாந்த கவுன்சில் தெரிவிக்கிறது.. இந்த சட்டம் திருமணத்திற்கு "தேவையற்ற சட்டத் தடைகளை" உருவாக்குகிறது என்றும், இச்சட்டம் திரும்ப பெறாவிட்டால் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த சட்டம் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், சர்வதேச தரங்களுக்கு ஏற்ப பாகிஸ்தானின் சட்டங்களை கொண்டு வருவதற்கும் ஒரு முக்கியமான படியாக பாகிஸ்தான் அரசு கருதுகிறது. ஏற்கனவே சிந்து மாகாணத்தில் குழந்தை திருமண சட்டத்தை இயற்றி, இரு பாலருக்கும் திருமண வயதை 18 ஆக நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் இஸ்லாமாபாத் பிரதேசத்திலும் படிப்படியாக இந்த சட்டத்தை அமல்படுத்த பாகிஸ்தான் அரசு முயற்சித்து வரும் நிலையில் அதற்கு இஸ்லாமிய அமைப்புகள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.