பொலிஸாரை மோதும் விதத்தில் டிப்பர் வாகனத்தை செலுத்தி தப்பி செல்ல முயன்ற சாரதி, சுமார் 4 கிலோமீட்டர் தூரம் துரத்தப்பட்ட பின் கைது செய்யப்பட்டுள்ளார்.
பளை பகுதியில் இருந்து மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம், நுணாவில் சாவகச்சேரி பொலிஸாரால் நிறுத்த முயற்சிக்கப்பட்டபோது, பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்கு உட்படாமல், வாகனத்தை நேராக மோதும் முறையில் செலுத்தி, சாரதி வாகனத்துடன் தப்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பொலிஸார் தமது வாகனத்தில் பின்தொடர்ந்து, மட்டுவில் பகுதியில் சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில், சாரதி வாகனத்தை கைவிட்டு தப்ப முயன்ற வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாரதி மற்றும் டிப்பர் வாகனம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சாரதிக்கு எதிராக அனுமதியின்றி மணல் ஏற்றல், வாகன அனுமதிப்பத்திரம் இன்றி செலுத்தல், பொலிஸாரின் கட்டுப்பாட்டை மீறல், விபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் செலுத்தல், பிரதான வீதியில் ஆபத்தான முறையில் ஓட்டல் போன்ற குற்றங்களின் கீழ் சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.