மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகர் பங்கியில் உள்ள பார்தெலமி பொகாண்டா உயர்நிலைப் பாடசாலையில், மின்மாற்றி வெடித்ததையடுத்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 29 மாணவர்கள் உயிரிழந்தனர் மற்றும் 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மத்திய ஆப்பிரிக்க குடியரசு. இதன் தலைநகர் பாங்குயில் உயர்நிலைப் பாடசாலை ஒன்று செயல்படுகிறது.
இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பாடசாலையில் ஆண்டு இறுதி பரீட்சைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
எனவே மாணவர்கள் பாடசாலையில் அமர்ந்து பரீட்சை எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு குண்டு வெடிப்பது போல பயங்கர சத்தம் கேட்டது. இதனால் பீதியடைந்த மாணவர்கள் அங்கும், இங்குமாக ஓடினர்.
இதனை தொடர்ந்து பாடசாலை கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. மளமளவென தீப்பற்றி எரிந்ததால் அந்த இடம் முழுவதும் கரும்புகை மண்டலமாக மாறியது.
இதற்கிடையே தீ விபத்து குறித்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். அவர்களின் பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த கோர சம்பவத்தில் 29 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கிய 280 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், பாடசாலை அருகே இருந்த டிரான்ஸ்பார்மரில் சீரமைப்பு பணி நடந்தபோது திடீரென வெடித்துச் சிதறியது தெரிய வந்துள்ளது.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்துக்கு ஜனாதிபதி பாஸ்டின் ஆர்க்கஞ்ச் டூடேரா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் நாடு முழுவதும் 3 நாட்கள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் என தெரிவித்தார்.