முள்ளிவாய்க்காலில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்த, காணாமல் போன, காயம் அடைந்த தமிழ் பொதுமக்கள் நினைவாக வெள்ளவத்தையில் இன்று (18) காலை நடத்தப்பட்ட அறப்போராட்ட நினைவேந்தல் நிகழ்வில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
அலெக்ஸாண்ட்ரா வீதிக்கு எதிரே உள்ள கடற்கரைப் பகுதியில் இந்த நிகழ்வு அமைதியான முறையில் நடைபெற்று வந்தது. பங்கேற்பாளர்கள் அனைவரும் வெண்மலர்களை கையில் எடுத்து, மௌன அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், வேறு ஒரு குழுவினர் நிகழ்வை தடுக்க முற்பட்டதையடுத்து, பதற்றம் உருவானது. அந்த குழு கண்டனங்களை எழுப்ப முயற்சித்தது என்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட வீடியோக்களில் தெரியவருகிறது.
பொலிசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வருகை தந்து, நிலைமை தீவிரமாவதைத் தடுக்க அந்த குழுவினரை சிதறடிக்க முயற்சித்தனர். நிகழ்வில் கலந்து கொண்ட சிலர் இந்த முயற்சியை அரசியல் தூண்டலுடன் கூடியதென கண்டனம் தெரிவித்தனர்.
இதனிடையே, மக்களிடையே பதற்றம் ஏற்பட்டதாலும், பொதுச்சமாதானத்தை பேணும் வகையில், போலிசார் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டனர்.
இந்த நிகழ்வில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், தமிழ் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டிருந்தனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நாடு முழுவதும் நடைபெற்று வரும் சூழலில், இந்த சம்பவம் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மீறான செயற்பாடாகக் கண்டிக்கப்படுகிறது.