பனை அபிவிருத்திச்சபையின் தலைவர் வி.சகாதேவனை பதவி நீக்குவதற்கான முயற்சிகள் திரை மறைவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.
கடந்த காலத்தில் பனை அபிவிருத்திச்சபையில் இடம்பெற்ற ஊழல்களுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்களுக்கு எதிராக அதன் தலைவரும்-புதிய பணிப்பாளர்சபையும் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக அமைச்சினுடைய அதிகாரிகள் சிலர் செயற்பட்டு வருவதாக குற்றச்சாட்டப்படுகிறது.
குறிப்பாக கடந்த காலங்களில் பனை அபிவிருத்திச்சபையின் தலைவர் சகாதேவன் திக்கம் வடிசாலையை மீள இயக்க நடவடிக்கை எடுத்த போது அமைச்சினுடைய அதிகாரிகள் அதற்கு முட்டுக்கட்டை போட்டனர் எனவும்-ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய, தலைவரால் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொது முகாமையாளரை அமைச்சின் செயலாளர் மீளவும் அதே பதவிக்கு நியமித்த நிலையில் சபையின் அலுவலர்கள் குறித்த செயற்பாட்டிற்கு கண்டனம் வெளியிட்டிருந்தனர்.
அதேபோல் தற்போது பனை அபிவிருத்திச்சபையின் யாழ் மாவட்ட தலைமைக் காரியாலயத்திற்கு நியமிக்கப்பட்ட நிர்வாக முகாமையாளர் மற்றும் உள்ளக கணக்காய்வாளர் ஆகியோர் தொடர்ந்தும் கொழும்பில் இருந்து பணியாற்றிவரும் நிலையில் கடந்த திங்கட்கிழமை பெருந்தோட்ட அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற பணிப்பாளர்சபைக் கூட்டத்தில் பனை அபிவிருத்திச்சபையின் பணிப்பாளர்சபை உறுப்பினர் பேராசிரியர் ஐங்கரன் மேற்படி உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாண தலைமைக் காரியாலயத்திற்கு வருகை தந்து பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் பேராசிரியரின் கருத்துக்கு முரணான விதத்தில் அமைச்சின் அதிகாரிகள் கருத்து வெளியிட்ட நிலையிலும்-அமைச்சர் அதனை கண்டுகொள்ளாத நிலையிலும் பேராசிரியர் தனது பணிப்பாளர் சபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக கூறி கூட்டத்தில் இருந்து வெளியேறியிருந்தார்.
யாழ்ப்பாண தலைமைக் காரியாலயத்திற்கு நியமனம் பெறப்பட்டு கொழும்பில் இருந்து பணியாற்றும் இருவருடையதும் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் சபையால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அமைச்சின் உயர் அதிகாரிகள் சிலர் அவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும்-அதற்காக சபையின் தலைவரை பதவி நீக்கம் செய்யும் முயற்சிகள் இடம்பெறுவதாகவும் தெரியவருகிறது.
பனை அபிவிருத்திச்சபையானது கடந்த காலத்தில் பல்வேறு ஊழல்-மோசடிகளுக்கு முகம்கொடுத்து மிகவும் பின்னடைந்திருந்த நிலையில் தற்போது படிப்படியாக அதனை மீளக் கட்டியெழுப்பும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. இவ்வாறான குளறுபடிகள் மீளவும் பனை அபிவிருத்திச்சபையை அதலபாதாளத்திற்குள் தள்ளுவதாக அமையும் என சமுக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.