இனப்படுகொலை குற்றச்சாட்டை எதிர்கொள்ள இலங்கைக்கு முதுகெலும்பு இல்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajenthirakumar ponnambalam ) தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வெளிநாட்டுக் கடன்கள் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசின் நிலைப்பாடு கேலிக்கூத்தானது. நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வழங்கிய நேர்காணலின் போது இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளதாகக் கூறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கருத்தைக் கூறியுள்ளார். இதனை நானும் அவதானித்தேன்.
இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாகக் குறிப்பிடுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்ட கருத்தை வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உடனடியாக மீளப் பெற வேண்டும்.
இது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்துக்கு மேற்பட்ட கருத்து. இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அரசின் நகைப்புக்கிடமான கேலிக்கூத்தான மனநிலையை இந்தக் கூற்று வெளிப்படுத்துகின்றது.
வெளிவிவகாரத்துறை அமைச்சர் என்பவர் சர்வதேசத்துக்குப் பதில் சொல்லக் கூடியவர். ஆகவே, அவர் இவ்வாறான கருத்துக்களைத் தெரிவித்திருக்க கூடாது.
இனப்படுகொலை குற்றச்சாட்டை எதிர்க்கொள்ள இலங்கைக்கு முதுகெலும்பு இல்லை. அதனால் தான் இவ்வாறான பிழையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இனப்படுகொலை என்பது ஒரு குற்றம்.
இலங்கை ரோம உடன்படிக்கைக்கு உடன்பட வேண்டும். இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது. அது ஒரு மிகப்பெரிய குற்றம். ஆனால் இனப்படுகொலை என்று கூறினால் சட்ட நடவடிக்கைஎன்ற நிலைப்பாட்டில் அரசு உள்ளது.
முந்தைய ஆட்சியாளர்களைக் காட்டிலும் நாம் மாறுபட்டவர்கள் எனக் கூறும் தற்போதைய ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் தொடர்பில் நாம் யோசிக்க வேண்டியுள்ளது. இனப்படுகொலை தொடர்பில் வழக்குகள் நடக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களினால் வழக்குகள் சுயாதீனமாக தாக்கல் செய்யப்பட வேண்டும். இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளதாகக் கூறுபவர்களுக்கு எதிராகக் கடும்சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்ட கருத்தை வெளிவிவகாரத்துறை அமைச்சர் உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.
இந்தக் கருத்து அவர் பதவி வகிக்கும் அமைச்சுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது. அது தொடர்பில் உங்களால் ஏன் நீதியை நிலைநாட்ட முடியவில்லை? உங்களிடமும் ஒரு குற்ற உணர்வூ இருப்பதனால்தான் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.