நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் கொத்மலை, கெரண்டி எல்ல, பகுதியில், ஞாயிற்றுக்கிழமை (11) காலை 4.30 மணியளவில் இடம்பெற்ற பஸ் விபத்தில், 22 பேர் பலியானதுடன், 45 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.
ரம்பொட பேருந்து விபத்தில் உயிரிழந்து கொத்மலை மருத்துவமனையில் இருந்து நாவலப்பிட்டி மாவட்ட பொது மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நான்கு பேரின் சடலங்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
விபத்தில் காயமடைந்த ஐந்து பேர் தற்போது நாவலப்பிட்டி மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
நோயாளிகளுக்கு மேலதிக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை பணிப்பாளர் டாக்டர் ஜனக சோமரத்ன கூறுகிறார்.
ரம்பொட பேருந்து விபத்தில் சேதமடைந்த பேருந்து தற்போது கொத்மலை பொலிஸ் மைதானத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. , இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர், கதிர்காமம் டிப்போவின் விசாரணை அதிகாரிகள் மற்றும் மோட்டார் வாகன பரிசோதகர்களும் விசாரணை நடவடிக்கைகளுக்காக வந்துள்ளனர்.
பேருந்தை ஆய்வு செய்த பின்னர் வழங்கப்படும் அறிக்கை எதிர்கால நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றும், அதுவரை இந்த விபத்து தொடர்பான உண்மைகள் வரும் புதன்கிழமை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றும் கொத்மலை தலைமை பொலிஸ் ஆய்வாளர் வஜிர தேவப்ரிவாய ரத்நாயக்க தெரிவித்தார்.