காசாவில் நிலவும் கடுமையான உணவுப் பற்றாக்குறை குறித்தும் அங்குள்ள மக்களின் அவல நிலை குறித்தும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கவலை வெளியிட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ட்ரம்ப், தனது இரண்டாவது பதவிக்காலத்தில் வளைகுடா நாடுகளுக்கு மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணத்தில், இஸ்ரேலைத் தவிர்த்தது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தநிலையில், அவர் காசா குறித்து இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான இரண்டு மாத போர் நிறுத்தம் மார்ச் மாதத்தில் முறிந்ததை அடுத்து, காசா மீது இஸ்ரேல் மீண்டும் முழு அளவிலான தாக்குதலைத் தொடங்கியது.
இதனால், காசாவில் உணவுப் பற்றாக்குறை மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச உதவி நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இது தொடர்பில், அபுதாபியில் கருத்து தெரிவித்த ட்ரம்ப் “காசாவில் நிலவும் சூழ்நிலையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அங்கு ஏராளமான மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள்.
இந்த விவகாரத்தை நாங்கள் தீவிரமாக கவனத்தில் கொள்வோம்," என தெரிவித்துள்ளார்.
காசாவில் இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களில் 74 பேர் கொல்லப்பட்டதாகவும், தொடர் ஷெல் தாக்குதல்களால் டஜன் கணக்கானவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காசாவில் நிலவும் இந்த அவல நிலையை முடிவுக்கு கொண்டுவர, உலக நாடுகள் உடனடியாக தலையிட வேண்டும் என்று சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடதக்கது.