மட்டக்களப்பு மாவட்டம், வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேணி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மூன்று மோட்டார் சைக்கிளில் 6 நண்பர்கள் கிண்ணியாவுக்குச் சென்றுவிட்டு ஓட்டமாவடி பகுதியை நோக்கி வந்தபோது ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியுள்ளது. இதன்போது அதில் பயணித்த இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பனிச்சங்கேணி பாலத்துடன் மோதியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதில், ஓட்டமாவடி - பதுரியா நகர், ஆலையடி பகுதி மற்றும் ஓட்டமாவடி, சூடுபத்தினசேனை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இரண்டு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞர்களின் சடலங்கள் வாகரை வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.