விழுப்புரத்தில் நேற்று இரவு நடைபெற்ற விழாவில் ‘மிஸ் திருநங்கை’ பட்டத்தை தூத்துக்குடியைச் சேர்ந்த சக்தி என்ற திருநங்கை பெற்றுள்ளார்.
தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் ‘கூவாகம் திருவிழா - 2025’ விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் நேற்று இரவு நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக, ‘மிஸ் திருநங்கை’பட்டத்துக்கான போட்டி தொடங்கியது. 14 திருநங்கைகள் பங்கேற்றனர். இரண்டு சுற்றுகளாக போட்டி நடத்தப்பட்டது. பட்டு புடவை மற்றும் நாகரிக உடைகளை உடுத்திக் கொண்டு ஒய்யார நடை நடந்து திருநங்கைகள் அசத்தினர். இதில் ‘மிஸ் திருநங்கை’ பட்டத்தை தூத்துக்குடியைச் சேர்ந்த சக்தி பெற்றார். இரண்டாவது இடத்தை சென்னையைச் சேர்ந்த ஜோதா, 3 ஆவது இடத்துக்கு சென்னையைச் சேர்ந்த விபாஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் விஷால் இரவு 9.15 மணிக்கு பங்கேற்றார். முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசியதும், நடிகர் விஷால் சுமார் 8 நிமிடம் பேசினார். பின்னர் அவர் இருக்கைக்கு திரும்பியதும், திருநங்கைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது, அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரது கைகளில் நடுக்கம் ஏற்பட்டது. அவரது கை மற்றும் கால்களை உதவியாளர்கள் தேய்த்துவிட்டனர். மேடையில் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் கூடியதால் காற்றோட்டம் குறைந்ததே, நடிகர் விஷால் உடல்நிலை பாதிப்புக்கு காரணம் என மேடையில் இருந்த திருநங்கைகள் கூறினர்.