இந்திய தலைநகர் டில்லியில் பலத்த காற்றுடன் கனமழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. இதனால் டில்லியின் பல்வேறு பகுதிகளில் வீதிகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வானிலை காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டது.
முன்னதாக, டில்லி மற்றும் அதையொட்டிய பகுதிகளுக்கு மழை குறித்த சிவப்பு எச்சரிக்கை கொடுத்திருந்தது இந்திய வானிலை ஆய்வு மையம். இந்நிலையில், டில்லி மட்டுமல்லாது ஹரியானாவின் சில பகுதியிலும் மழை பதிவானது.
டில்லியில் சனிக்கிழமை இரவு முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை விடிய விடிய பெய்த மழை காரணமாக வீதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. இரவு 11.30 முதல் அதிகாலை 5.30 மணி வரையிலான ஆறு மணி நேரத்தில் சுமார் 81.2 மில்லி மீற்றர் மழை பொழிந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சஃப்தர்ஜங் பகுதியில் மணிக்கு 82 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையமாக உள்ள டில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை விமான நிறுவனங்களும் சமூக வலைதள பதிவு மூலம் உறுதி செய்தன. சனிக்கிழமை இரவு 11.30 முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணி வரையில் 200 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. 49 விமானங்கள் திருப்பி விடப்பட்டன என தெரிவிக்கப்படுகிறது.
மழை காரணமாக பல்வேறு விமான நிறுவனங்களின் பயண சேவை பெரிய அளவில் மாற்றம் கண்டுள்ளது. அதனால் பயணிகள் தங்கள் விமானத்தின் புறப்பாடு நேரத்தை அறிந்து விமான நிலையம் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.