யாழ் வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்கரையில் இன்று(04)காலை மீனவர்கள் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க எல்லைக்குட்பட்ட கடற்பகுதிகளில் மனித வலுவற்று உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் புரிவது குறித்த சங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது
இதனை மீறி நபர் ஒருவர் அப்பகுதியில் உழவு இயந்திரம் கொண்டு அடாத்தாக தொழில் புரிந்துவருகின்றார்.
உடனடியாக இதை தடுத்து நிறுத்தி குறித்த கரைவலை வாடியை அகற்றுமாறு நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகள்,மருதங்கேணி பொலிஸ் நிலையம்,கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் போன்றவற்றிற்கு அறிவுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
இன்று(4) காலை குறித்த சம்மாட்டி ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க எல்லைக்குட்பட்ட பகுதியில் உழவு இயந்திரம் கொண்டு தொழில் புரிந்த போது அங்கு மீனவர்கள் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது
சம்பவம் தொடர்பாக நீரியல்வளத்திணைக்கள அதிகாரியிடம் எமது பிரதேச செய்தியாளர் வினவிய போது,
குறித்த கரைவலை சம்மாட்டிக்கு உழவு இயந்திரம் கொண்டு தொழில் புரிவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் அவரை உடன் அப்பகுதியில் இருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்
அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொள்ள தவறும் பட்சத்தில் முறுகல் நிலை வன்முறையாக மாறக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்
வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளிலும் சட்டத்திற்கு முரணாக கரைவலை தொழிலை மேற்கொள்வதால் மீனவர்களின் படகு,இயந்திரம் அண்மைக்காலமாக சேதங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.