திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த முஸ்லீம்பூர் பகுதியை சேர்ந்தவர் இர்பான் (வயது40). இவருக்கு திருமணம் ஆகி ஆஜிரியா என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர்.
இக்பால் வீதியில் உள்ள தனியார் முன்பள்ளி மற்றும் கீழ்நிலை பாடசாலையில் இர்பான் பாதுகாவலராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை இர்பான், வழக்கம்போல் தனது சைக்கிளில் பாடசாலைக்கு சென்றார்.
அப்போது எதிரே மோட்டார் சைக்களில் வந்த மர்ம கும்பல் அவரை வழிமடக்கி தகராறில் ஈடுபட்டனர். இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மர்ம கும்பல் இர்பானை சைக்கிளில் இருந்து கீழே தள்ளிவிட்டனர்.
தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அவரது வயிற்றில் குத்தினர். வலி தாங்க முடியாமல் அலறி கூச்சலிட்டபடி எழுந்து ஓடினார்.
அப்போது மர்ம கும்பல் விடாது துரத்தி சென்று, ஓட ஓட விரட்டி சென்று இடுப்பு, வயிறு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினர். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த இர்பான் துடிதுடித்து இறந்தார்.
அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் ஓடிவந்தனர். பொதுமக்கள் வருவதை கண்டதும் மர்ம கும்பல், இர்பான் இடுப்பில் குத்திய கத்தியை விட்டு, விட்டு அங்கிருந்து பைக்கில் தப்பி சென்று தலைமறைவாகி விட்டனர்.
இது குறித்து தகவலறிந்து வாணியம்பாடி டவுன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இர்பான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
வாணியம்பாடி பொலிஸ் அதிகாரி விஜயகுமார் தலைமையிலான பொலிஸார், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்தனர்.
மேலும் இது குறித்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து இர்பான் வேலை செய்யும் தனியார் பாடசாலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.