வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வினைத்திறனாகவும், ஒருங்கிணைந்தும், விரைவாகவும் செலவு செய்வது தொடர்பாக கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வினைத்திறனாகவும், ஒருங்கிணைந்தும், விரைவாகவும் செலவு செய்வது தொடர்பாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெகதீஸ்வரன், திலகநாதன் ஆகியோருக்கும், வடக்கு மாகாண பிரதம செயலாளர் தலைமையிலான மாகாண திணைக்களத் தலைவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (03.04.2025) இடம்பெற்றது.



வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்வதில் உள்ள பிரச்சினைகள், முன்னுரிமைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன. முக்கியமாக அரசாங்கத்துக்கு முன்வைக்க வேண்டிய மேலதிக திட்ட முன்மொழிவுகள், வடக்கின் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் இவற்றை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதி அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கலந்துரையாடலில் குறிப்பிட்டனர். 


கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், வனவளத்திணைக்களம், வன உயிரிகள் திணைக்களத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, மேய்ச்சல் தரவையின்மை, சட்டவிரோத மணல் அகழ்வு பொலிஸார் அதற்கு உடந்தையாகச் செயற்படுகின்றi தொடர்பில் சுட்டிக்காட்டினார். இதன்போது பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வவுனியாவில் சட்டவிரோத கிரவல் அகழ்வுடன் தொடர்புடையதாக டிப்பர் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட நிலையில் பிரதேச செயலர் ஒருவர் அதனை விடுவிக்க தலையீடு செய்திருந்தார் என்றும் குறிப்பிட்டார்.


 சட்டவிரோத மணல், கிரவல், கல் அகழ்வு நடவடிக்கைகளுடன் பொலிஸாருக்கு மாத்திரமல்ல அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் இதன்போது சுட்டிக்காட்டினார். எதிர்காலத்தில் கனிய வளங்களுக்கான வழித்தட அனுமதிகளை இறுக்கமாக்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்வுகள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது. 


தொடர்ந்து வடக்கு மாகாண பிரதம செயலாளர் மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பான முழுமையான விளக்கத்தை வழங்கினார். 
அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண விவசாய அமைச்சு அதன் கீழான திணைக்களங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய வன்னித் தேர்தல் மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, தெரிவு செய்யப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பில் தொடர்புடைய திணைக்களத் தலைவர்களால் விளக்கமளிக்கப்பட்டது. கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் கீழான பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதன் சுட்டிக்காட்டினார்.


 வன்னிப் பிராந்தியத்திலுள்ள கால்நடை மருத்துவ அதிகாரிகளுக்கான வாகனங்கள் பற்றாக்குறை மற்றும் கால்நடைகளுக்கான தடுப்பு ஊசிகளுக்கான கட்டணம் அறவிடப்படுதல் உள்ளிட் பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவர் கருத்துக்களைத் தெரிவித்தார். 

வன்னிப் பிராந்தியத்தில் மக்களுக்கான காணிகளை கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் தங்கள் பலத்தைப் பிரயோகித்து தமது உடைமையாக்கியுள்ளனர் என்று சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், தேர்தல் முடிவடைந்த பின்னர் வன்னிப் பிராந்திய மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார். 

வன்னிப் பிராந்தியத்திலுள்ள சில அதிகாரிகள் தமது தனிப்பட்ட பழிவாங்கல்களைத் தீர்ப்பதற்காக விவசாயிகளுக்கான உரமானியங்கள் மற்றும் இழப்பீடுகளை வழங்காமல் இருக்கின்றனர் என்றும் அவ்வாறு நடைபெறாமல் பார்த்துக்கொள்ளுமாறும் அதிகாரிகளிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் கேட்டுக்கொண்டார். 
வடக்கு மாகாண சுகாதார அமைச்சு மற்றும் அதன் கீழான திணைக்களங்களின் நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஆராயப்பட்டது. மருத்துவமனைகளில் கழிவு நீர் சுத்தகரிப்பு செயற்பாட்டுக்குரிய ஏற்பாடுகள் இல்லாமையால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

 முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் நிலை தொடர்பாகவும் விரிவாக கருத்துத் தெரிவிக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு பிரதேச மருத்துவமனைக்கு கட்டடங்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளபோதும் அங்கு நோயாளர்கள் குறைவு எனவும் மாஞ்சோலையிலுள்ள முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு வசதிகள் இல்லாதபோதும் நோயாளர்கள் அதிகம் எனவும், இது மிகப்பெரிய சிக்கல்களை தோற்றுவித்துள்ளது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். 

இதேவேளை, வடக்கு மாகாணத்துக்கான ஆளணி உள்ளிட்ட தேவைப்பாடுகளின் பட்டியல்களை தயார் நிலையில் வைக்குமாறும், அதனை தம்முடன் பகிர்ந்து கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் கொழும்பு அமைச்சுக்களுடன் கலந்துரையாடி தம்மால் முடிந்த விடயங்களை செயற்படுத்தித் தருவோம் என உறுதியளித்தனர். 
இதன் பின்னர் வடக்கு மாகாண கல்வி அமைச்சு அதன் கீழான திணைக்களங்களின் ஒதுக்கீடுகள் தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் விளக்கமளித்தார். 

வன்னிப் பிராந்தியத்திலுள்ள சில பாடசாலைகளின் சூழல்கள் பற்றைகள் வளர்ந்து பராமரிப்பு இல்லாமல் உள்ளன. மலசலகூடங்கள் கட்டிக்கொடுக்கப்பட்டிருந்தாலும் அவை பயன்படுத்தப்படாமல் உள்ளன என்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரியப்படுத்தினர். இதன்போது பதிலளித்த கல்வி அமைச்சின் செயலர், பல இடங்களில் பாடசாலைகளின் பராமரிப்பே சவாலாக உள்ளதாகக் குறிப்பிட்டார். வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக எந்தெந்த பாடசாலைகளில் இவ்வாறான நிலைமைகள் உள்ளன என்பதை அறிந்து அதற்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தினார். 

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் கட்ட ஆரம்பித்து இடைநடுவில் உள்ள கட்டடங்கள் தொடர்பில் விரைவில் முடிவெடுக்குமாறும் ஆளுநர் பணிப்புரைவிடுத்தார். 
'வவுனியா நகரப் பகுதியில் பாடசாலைகளின் அதிபர்கள் தேவைக்கு அதிகமாக ஆசிரியர்களை வைத்திருக்கின்றனர். இதனால் சில பாடசாலைகள் ஆசிரியர்கள் இல்லாமல் இருக்கின்றன. சிங்கள பாடத்துக்கான ஆசிரிய ஆலோசகர் ஒருவர் வயல் செய்கின்றார். அவர் கையெழுத்து வைத்துவிட்டு வயல் செய்யச் சென்றுவிடுவார். இவ்வாறானவர்களை ஏன் கண்காணிப்பதில்லை? அதேநேரம் பரீட்சை வினாத்தாள்களில் பல பிழைகள் காணப்படுகின்றன' என பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். 

ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும் விளையாட்டு அலுவலர்களை ஏன் வைத்திருக்கின்றீர்கள் என்று கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன், அவர்கள் பெயருக்குத்தான் இருக்கின்றார்கள் எனவும் சாடினார். அவர்களுக்கான கண்காணிப்பு பொறிமுறை என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார். விளையாட்டு அலுவலர்கள், கலாசார அலுவலர்கள் போன்றோர் மாகாணத்துக்குரிய அலுவலர்களாக இருந்தாலும், பிரதேச செயலகங்களில் கடமையாற்றுவதால் அவர்களுக்கான கண்காணிப்பு பொறிமுறையில் தொய்வு இருப்பதாக கல்வி அமைச்சின் செயலர் குறிப்பிட்டார். அத்துடன் நிர்வாக ரீதியான சவால்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். 

இதன் பின்னர் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் அதன் கீழான திணைக்களங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. இதன்போது சோலை வரி மீளாய்வு, அதிகரித்த வரி அறவீடு என்பன தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதனால் சுட்டிக்காட்டப்பட்டது. அதற்குரிய தீர்வுகள் ஆளுநர் ஊடாக வழங்கப்படும் என அமைச்சின் செயலர் குறிப்பிட்டார். வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படவுள்ள வீதி அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் ஆராயப்பட்ட போது நாடாளுமன்ற உறுப்பினர்களால் சில முன்மொழிவுகளும் மேற்கொள்ளப்பட்டன. மக்களின் தேவைப்பாட்டுக்குரிய வீதிகளுக்கு கூடியளவு முன்னுரிமை கொடுக்குமாறும் கோரிக்கை முன்வைத்தனர். அதற்கு அமைவாக சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. 

இதேவேளை இறுதியாகக் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், ஒதுக்கப்பட்ட நிதியைச் செலவு செய்வதற்கு இன்னமும் 6 மாதங்கள்தான் உள்ளன. வினைத்திறனாகவும் உரிய காலத்துக்குள்ளும் செலவு செய்து முடிக்கவேண்டும். எமது மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்பியதாக இருக்கக் கூடாது. இதேநேரம், கடந்த காலங்களில் திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் வழங்கப்படும்போது திணைக்களங்களில் பணியாற்றும் பொறியியலாளர்கள், தொழில்நுட்ப அலுவலர்களே பினாமிப் பெயர்களில் அதனைப் பெற்றுக்கொண்டனர். அவர்களுக்கு ஒப்பந்தம் கிடைக்காவிடின், ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொண்டவருக்கான கொடுப்பனவில் இழுத்தடிப்புச் செய்தார்கள். இனி அவ்வாறு செய்வதற்கு இடமளிக்க முடியாது. நீங்கள் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும். சிட்டைக்கான பணம் விடுவிக்கப்படும்போது தரகுப் பணம் பெற்றமையையும் நாம் அறிவோம். இனி அவ்வாறு இடம்பெற்றால், எந்தவொரு தரநிலையும் பாராது சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக நாம் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். அதேநேரம், நானோ, எங்கள் அரசாங்க கட்சியின் உறுப்பினர்களோ, யாராவது ஒருவருக்கு ஒப்பந்ததை கொடுங்கள் என்று பரிந்துரை செய்யமாட்டோம். ஆனால் ஒப்பந்தங்கள் எவ்வாறு வழங்கப்படுகின்றன என்பதைக் கண்காணிப்போம், என்றார். அத்துடன் பிரதி அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டத்தை ஒழுங்குபடுத்தியமைக்காக ஆளுநருக்கு நன்றி தெரிவித்தனர். 

இந்தக் கலந்துரையாடலில் கௌரவ நாடாளுமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும், பிரதம செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் - நிர்வாகம், நிதி, பொறியியல் ஆகியோரும், அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களப் பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.





கருத்துரையிடுக

 உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

 உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள் .

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.