மனைவியை கொன்றதாக கணவர் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மனைவி உயிருடன் நீதிமன்றத்துக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் வழக்கை விசாரிக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள குஷால் நகரை சேர்ந்தவர் குருபர சுரேஷ் (38). விவசாய கூலியான இவர் தனது மனைவி மல்லிகெவுடன் அங்கு வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு சுரேஷ் தனது மனைவியை காணவில்லை என குஷால் நகர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, 2021-ம் ஆண்டு காவிரி ஆற்றில் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கிடைத்துள்ளது. அதனை கைப்பற்றிய பொலிஸார் அந்த உடல் காணாமல் போன பெண்ணின் உடல் என உறுதி செய்து இதையடுத்து குருபர சுரேஷ் தனது மனைவி மல்லிகெவை கொன்று ஆற்றில் போட்டதாக அவரை கைது செய்துள்ளனர்.
இவ்வழக்கில் 2022-ம் குருபர சுரேஷ் மைசூரு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பொலிஸார் கைப்பற்றிய பெண்ணின் உடலை டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
அதில் ஆற்றில் கைப்பற்றப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் மல்லிகெவுடையது அல்ல என தெரியவந்தது. இதனையடுத்து குருபர சுரேஷ் கடந்த ஆண்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1-ம் திகதி இவ்வழக்கில் திடீர் திருப்பமாக குருபர சுரேஷ் தனது மனைவி மல்லிகெவை மடிகேரியில் உள்ள ஒரு உணவகத்தில் பார்த்துள்ளார். அதனை புகைப்படம் எடுத்து, பொலிஸாருக்கு ஆதாரத்துடன் அனுப்பியுள்ளார். இருப்பினும் பொலிஸார் அதனை ஏற்கவில்லை. இந்நிலையில் இவ்வழக்கு மைசூரு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது குருபர சுரேஷ் சார்பில், கொலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட மல்லிகெவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். அப்போது காணாமல் போன மல்லிகெ தனது காதலனுடன் வாழ்ந்து வந்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதி ''இவ்வழக்கை விசாரித்த பொலிஸார் மிகவும் அலட்சியத்துடன் செயல்பட்டுள்ளனர். இந்த வழக்கில் மைசூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வரும் 17-ம் திகதிக்குள் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்''என உத்தரவிட்டுள்ளது.